சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலிஸ்டர் நூல்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகக் குறைவான விலையில் சீனாவிலிருந்து பாலிஸ்டர் நூல்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் இறக்குமதிக் குவிப்பு மற்றும் இதர வரிகளுக்கான பொது இயக்குநரகத்தில் (டி.ஜி.ஏ.டி.) முறையிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய இந்த ஆணையம் உயர் வினைத் திறன் கொண்ட பாலிஸ்டர் நூல்கள் சீனாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து டி.ஜி.ஏ.டி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் சீனாவிலிருந்து பாலிஸ்டர் நூல்கள் இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கலாம். டன் ஒன்றுக்கு 174 டாலர் முதல் 528 டாலர் வரையில் வரி விதிக்கலாம்' என்று கூறியுள்ளது. இதையடுத்து வரி விதிப்பதா வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவை ஒன்றிய நிதியமைச்சகம் எடுக்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்.ஆர்.எஃப் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் புகார் மனுவை அளித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக