ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, ஆர்எஸ்எஸ் முறைப்படி பிரார்த்தனை செய்வது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்எஸ்எஸ் விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கவுள்ளார் என்ற தகவல் வெளியானதுமே பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரணாப் இதில் பங்கேற்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக பிரணாபின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பிரணாப் கலந்துகொண்டால் அவரது பேச்சு மறக்கப்படும். ஆனால், காட்சிகள் தவறான செய்திகளுடன் பரவிக்கொண்டே இருக்கும். பிரணாப் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
எனினும் தான் ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொள்வது உறுதி என பிரணாப் அறிவித்தார். அதன்படி, நாக்பூரில் நேற்று முன்தினம் (ஜூன் 7) நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்றாமாண்டு பயிற்சி நிறைவு விழாவில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்திலேயே, பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போன்று தொப்பி அணிந்து, சல்யூட் அடிக்கும் புகைப்படங்களும் நெஞ்சில் கைவைத்து உறுதிமொழி ஏற்பது போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. பலர் அது மார்ஃபிங் புகைப்படம் என்பதை அறியாமலேயே பகிரத் தொடங்கினர்.
இதையடுத்து, சர்மிஷ்டா முகர்ஜி நேற்று (ஜூன் 8) தனது ட்விட்டர் பக்கத்தில், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பதிவேற்றி, “இதற்குத்தான் நான் பயந்தேன். எனது தந்தையையும் எச்சரித்தேன். சில மணிநேரம்கூட ஆகவில்லை பாஜக / ஆர்எஸ்எஸ்காரர்கள் தங்கள் அபத்தமான தந்திர வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்” என்று பதிவிட்டார்.
இந்தப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதிமொழி ஏற்பது போன்ற மார்ஃபிங் புகைப்படங்களை சில பிரிவினை அரசியல் இயக்கங்கள் சமூக வலைதளத்தில் பரப்பிவருகின்றனர். ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் கலந்துகொள்ளாமல் தடுக்க இவர்கள் முயற்சி செய்தார்கள். தற்போது, ஆர்எஸ்எஸ் மீது அவதூறு பரப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக