தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்து தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என வழக்கறிஞர் அன்புசெழியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் "சென்னையை அடுத்த தாம்பரத்தில் செவன்த் டே அட்வன்டிஸ்ட்(Seventh day Adventist) என்ற மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை விரிவாக்கம் செய்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், சுமார் 1,500 பள்ளி மாணவர்கள் படித்துவருகிறார்கள். இப்பள்ளியின் பழைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளபோது, புதிதாக இந்தப் பள்ளியில் மேல்தளம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம் கட்ட தாம்பரம் நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மனுவை தாம்பரம் நகராட்சி நிர்வாகம் நிராகரித்து கட்டிடம் கட்ட அனுமதி தரவில்லை
சட்டத்துக்கு விரோதமாகவும் அனுமதி இல்லாமல் பள்ளியில் மேல்தளம் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனு கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி இளந்திரையன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இதுதொடர்பாக வீட்டு வசதி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக