அரக்கோணம் அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, அப்பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியகரம் கிராமத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் பகவானை பணி மாற்றம் செய்ய அப்பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் பாசப் போராட்டத்தின் எதிரொலியாய் ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை பள்ளிக் கல்வித் துறை ரத்து செய்தது.
திரைப்படங்களில் முதலில் ஒரு படம் வெற்றியடைந்தால், அதன் தொடர்ச்சியாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும். அதுபோல வேலூரில் ஆசிரியரின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள சம்பவம் "பகவான் பார்ட் 2" போன்று இருக்கின்றது.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சேந்தமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விஜயா என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் மாணவர்களுடன் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வந்த நிலையில், தற்போது விஜயாவை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இந்த தகவலறிந்த மாணவர்கள் ஆசிரியர் விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று பள்ளியின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதேபாணியில் ஆசிரியர் விஜயாவின் பணி மாற்றத்தை ரத்து செய்ய மாணவர்கள் போராட ஆரம்பித்துள்ளது, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக