சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.முருகேசன் என்பவரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த டாக்டர் எஸ்.மணியனின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முருகேசன் என்பவரை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் பதவி வகிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த டாக்டர் வி.முருகேசன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மணியன் ஊழலில் ஈடுபட்டதாக அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தனர். அதில், ‘பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். பல்கலைக்கழக முறைகேடுகளைச் சரிசெய்ய தமிழக அரசு நிர்வாக அதிகாரியை அமைத்தது. அதன் பிறகு துணைவேந்தராக டாக்டர் மணியன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலமும் தற்போது முடிந்து விட்டது. இந்நிலையில் இவரே மீண்டும் துணைவேந்தராக வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக அறிகிறோம். மீண்டும் அவர் வந்தால் பல்கலைக்கழகத்தில் ஒன்றுமே இருக்காது. அரசு சொன்ன எதையுமே அவர் பணிக்காலத்தில் செய்யவில்லை. பணி ஓய்வுபெறும் நிலையிலும் விதிகளை மீறி பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்’ என குற்றம்சாட்டியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக