பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் தற்காலிகச் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் அண்மையில் பட்டப் படிப்பை முடித்த மாணவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்த தற்காலிகச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 132 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் படிப்பை முடிக்கும் மாணவர்கள், உடனடியாக கல்விச் சான்றிதழ்கள் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.
இச்சிரமத்தைப் போக்கும் வகையில், படிப்பை முடித்த மாணவர்கள் அவர்களுக்கான தற்காலிகச் சான்றிதழை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு, வழக்கமாக ஒரு மாதத்துக்குப் பிறகே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அதுபோல, அவர்களுக்கான தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க ஒரு மாதம் முதல் 2 மாதங்கள் வரை கால அவகாசம் ஆகும்.
இந்தத் தாமதம் காரணமாக, முதுநிலைப் படிப்புகளில் சேர்வதிலும், வேலைவாய்ப்புக்குச் செல்வதிலும் மாணவர்களுக்குச் சிரமங்கள் இருந்து வந்தன. இந்தச் சிரமங்களைப் போக்கும் வகையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு படிப்பை முடிக்கும் இளநிலை, முதுநிலை பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் புரொவிஷனல் சான்றிதழை ஜூலை 1-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தச் சான்றிதழ்கள் 3 மாதங்களுக்குச் செல்லத்தக்கது. அதற்குள் நிரந்தரச் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும்.
*உண்மைத் தன்மையை அறிய வசதி*
முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், இவ்வாறு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் தற்காலிகச் சான்றிதழின் வலது பக்கம் மேல் பகுதியில் கியூ.ஆர். குறியீடு இடம்பெற்றிருக்கும்.
இந்தக் குறியீடை ஸ்கேன் செய்து சமர்ப்பிப்பதன் மூலம், இந்த தற்காலிகச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கல்வி நிறுவனங்களும், தொழில்நிறுவனங்களும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக