தபால் துறையின் அலட்சியத்தால் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் குறிப்பிட்ட தேதிக்குள் செல்லாததால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவரின் மருத்துவப் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த வசந்த் என்ற மாணவர் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்விலும் 384 மதிப்பெண்கள் பெற்ற இவர் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தை ஜூன் 14ஆம் தேதி காஞ்சிரங்கால் தபால் நிலையத்தில் விரைவு தபால் மூலம் அனுப்பியுள்ளார். அவரது விண்ணப்பம் ஜூன் 23ஆம் தேதிதான் மருத்துவ இயக்குநரகத்துக்குச் சென்றுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தப்படி, ஜூன் 19ஆம் தேதிக்குள் கிடைக்காததால், மாணவர் வசந்த் அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாணவரின் அம்மா ஞானஜோதி பேசுகையில், ”பன்னிரெண்டாம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்து, நீட் தேர்வுல அதிக மார்க் வாங்கிய அவனோட கனவு மற்றும் லட்சியம் எல்லாமே மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக நாங்கள் சரியான தேதியில்தான் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினோம். ஆனால், தபால் துறையின் அலட்சியத்தால் சரியான நேரத்தில் விண்ணப்பம் போகாததால் அவனுடைய படிப்பு கேள்விக்குறியாகிவிட்டது. நாங்க இப்போ மன உளைச்சலும், அவதியும் பட்டுக்கிட்டு இருக்கிறோம்” என்று கவலையுடன் கூறியுள்ளார்.
மாணவன் வசந்த் கூறுகையில், ”தபால் துறையின் அலட்சியத்திற்கு நாங்க பொறுப்பேற்க முடியாது. நியாயத்தை உணர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் எனது விண்ணப்பத்தை ஏற்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, சிவகங்கை கலெக்டர் வளாக தபால் நிலையத்தில், தபாலைத் தாமதமாக அனுப்பியது தெரியவந்தது. தபால் நிலைய அதிகாரி திருக்குமரன் கூறுகையில், ”விரைவுத் தபாலை பதிவு செய்த ஊழியர் தவறு செய்துள்ளார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக