பச்சிளம் குழந்தைகளின் இறப்பைக் குறைக்கும் வகையில் குஜராத்தில் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார மையங்களில் மருத்துவ அவசர வசதி இல்லாததால் பிறந்த குழந்தைகளின் இறப்புகளைத் தடுக்க, குஜராத் அரசு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக சிறந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல, “மருத்துவமனைகளுக்கு இடையிலான ஆம்புலன்ஸ் சேவை திட்டம்” எனும் பெயரில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில சுகாதார ஆணையர் டாக்டர் ஜெயந்தி ரவி,”ஜாம்நகர் மாவட்ட சிவில் மருத்துவமனையில் இருந்து அவசர சிகிச்சைக்காக அகமதாபாத் மருத்துவமனைகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு அங்கு அழைத்துச் செல்ல அதிக நேரம் தேவைப்படுகிறது. மருத்துவமனையை அடைவதற்குள் பல குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது.
இதைதொடர்ந்து ஜாம்நகர் மாவட்ட சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஒரு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனையின் பேரில் கடந்த ஆண்டு ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் சோதனை திட்டமாகத் தொடங்கப்பட்டது.
அதன்படி 43 குழந்தைகள் காப்பாற்றப்பட்டன. எனவே இந்த முறையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு முதற்கட்டமாக அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட 10 ஆம்புலன்சுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று கூறினார்.
மேலும் இந்த வசதி '108' சேவைக்கும் இணைக்கப்படும், அவசரக்காலத்தில் பொதுமக்களும் இந்தச் சேவையை பெறலாம் என்று குறிப்பிட்டார்.
குஜராத்தில் கிராமப்புறங்களில் குழந்தைகளின் இறப்பு வீதம் 39 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 27 சதவிகிதமாகவும் உள்ளது என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக