சான்றிதழ்கள், 'டோர் டெலிவரி'; டில்லி அரசு அதிரடி திட்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சான்றிதழ்கள், 'டோர் டெலிவரி'; டில்லி அரசு அதிரடி திட்டம்


புதுடில்லி : அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல், 
வீட்டில் இருந்தே ஓட்டுனர் உரிமம், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட, 40 சேவைகளை, பெறும் வசதியை, ஜூலை முதல், டில்லி அரசு அமல்படுத்த உள்ளது.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு சேவைகளை, வீட்டில் இருந்தபடியே பெறும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, ஆளும் கட்சி அறிவித்தது. அதற்கான பணிகள் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டு, ஜூலையில், அமலுக்கு வரவுள்ளதாக, மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஜாதி, பிறப்பு, இறப்பு, வருமான சான்றுகள், வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிமம், திருமண பதிவு சான்றிதழ், முதியோர் ஓய்வூதிய திட்டம், தண்ணீர் மற்றும் கழிவு நீர் குழாய்களுக்கான புதிய இணைப்பு உட்பட, 40 அரசு சேவைகளை, வீட்டிற்கே வந்து வழங்க, டில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சேவைகளை பெற விரும்புவோர், அரசு வழங்கும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கு வசதியான நேரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நபர்கள், வீட்டுக்கே வந்து, தேவையான விபரங்களை பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எடுத்து செல்வர்.

பின், அரசு வழங்கும் அடையாள அட்டையோ, சான்றிதழோ, குறிப்பிட்ட தேதியில், வீட்டுக்கே வந்து தரப்படும். 'இதற்கு, 50 ரூபாய் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சேவைகளை தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை மாத இறுதியில், இந்த சேவை துவங்கப்பட உள்ளது. ஆரம்பத்தில், 40 அரசு சேவைகளில் துவங்கி, படிப்படியாக, 60 சேவைகள் வரை விஸ்தரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here