ஒன்றிய வரி வருவாயில் அதிக அளவில் நிதியைப் பெறும் 14 முதல் 20 மாநிலங்கள் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கான நிதியை போதுமான அளவில் பயன்படுத்தாமல் குறைத்துள்ளன என்று அரசுத் துறை அறிக்கைகளை ஆய்வு செய்து இந்தியா ஸ்பெண்ட் நிறுவனம் கூறியுள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் கிராமப்புறங்களில் 53 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 35.6 விழுக்காடும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது 2015-16ஆம் ஆண்டில் வெளிவந்த தேசிய குடும்பநல சுகாதார ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம், பீகார், ஜார்கண்ட், திரிபுரா, ஒடிசா, தெலங்கானா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் நாகாலாந்து ஆகிய 14 மாநிலங்களில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு 3 விழுக்காடு முதல் 55 விழுக்காடு வரை நிதி குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக நாகாலாந்து 3 விழுக்காடு நிதியையும், அதிகபட்சமாக ஜம்மு - காஷ்மீர் 55 விழுக்காடு நிதியையும் குறைத்துள்ளது. இதில் பல வடமாநிலங்கள் ஒன்றிய வரி வருவாயில் கூடுதல் நிதியைப் பெற்றுள்ளன. ஹரியானா, மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்கள் மட்டும்தான் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான நிதியை அதிகரித்துள்ளன.
உலக சுகாதார வசதிகள் மற்றும் தரத்துக்கான குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 2016ஆம் ஆண்டில் 145ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 1990ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் 153ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இருப்பினும் இந்தப் பட்டியலில் அண்டை நாடான வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளை விடப் பின்தங்கித்தான் உள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துப் பட்டியலில் இந்திய சராசரியை விட தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக