இந்தியாவில் தரமான பருத்தியை உற்பத்தி செய்து அதைச் சர்வதேச பிராண்டாக மாற்ற வேண்டுமென அத்துறையினரிடம் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டுள்ளார்.
மே 31ஆம் தேதி கொல்கத்தாவில் வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய ஜவுளித் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி, "இந்தியாவின் பருத்தி உற்பத்தியைத் தரமானதாக மாற்றி, சர்வதேச பிராண்டாக மாற்றுவதற்கு உரிய முன்மொழிதல்களைப் பருத்தி உற்பத்தித் துறையினர் வழங்க வேண்டும். அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைப் போன்று இந்தியாவுக்கென பிரத்யேகமாகப் பருத்திக்கு பிராண்ட் பெயர் இல்லை. இதனால் பருத்தி ஏற்றுமதியின் மூலம் வருவாய் ஈட்டும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுக்க இயலவில்லை" என்று கூறினார்.
இந்திய ஜவுளித் துறை கூட்டமைப்பின் தலைவர் கே.ஜெயின் பிசினஸ் லைன் ஊடகத்திடம் கூறுகையில், "பருத்தியின் தரத்தை உயர்த்துவது குறித்து விவாதங்கள் அதிகமாக எழத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சுவின் பருத்தி மற்றும் குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் ஷங்கர் 6 பருத்தி ரகங்கள் தரமானவை. இவை சர்வதேசத் தரத்துக்கு இணையானவை. நாடு முழுவதும் தரமான பருத்தி உற்பத்தி செய்வது குறித்த இறுதிக்கட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக