எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா "ஒரு போதும் பின்வாங்காது" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கனடாவின் எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிக்க 2 பில்லியன் கனடா நாட்டு டாலர்கள் மதிப்பிலான உதவிகள் செய்யப்படும் என்றும் அந்நாடு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
16.6 பில்லியன் கனடா டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீல்லாண்ட் குறிப்பிட்டார்.
கனடாவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களை குறிவைத்தே இருக்கின்றன.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின், பெனிஸில்வேனியா மற்றும் ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் இருந்து தயாரிக்கப்படும் யோகர்ட், கெட்ச் அப் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு ஆகியவையும் இதில் அடங்கும்.
"எங்களின் இந்த அணுகுமுறை நிலைமையை தீவிரமாக்காது. ஆனால், அதே நேரத்தில் நாங்கள் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்" என்று ஃப்ரீல்லாண்ட் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும், ஒன்றுக்கொன்று உயர் வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன. கடந்த ஆண்டு 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் நடந்துள்ளது.
ஆனால், பல்வேறு விவகாரங்களால் இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகள் தற்போது பதற்றம் அடைந்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக