ஸ்டார் வார்ஸ் என்ற பிரபலமான ஆங்கிலத் திரைப்படத்தின் பல பாகங்களை யாரும் மறந்திருக்க முடியாது. கிரகங்களுக்கும் பல அண்டங்களுக்கும் நடக்கும் யுத்தங்கள் நம்மைப் பிரமிக்க வைத்து அதிர்ச்சி அடைய வைக்கும். நிஜத்தில் அது போன்று நடந்தால்? ஆம்; இதே போன்று ஒரு விண்வெளி யுத்தத்துக்கு அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், ஒரு பெரும் வேறுபாடு யுத்தம் மற்ற கிரகங்கள் அண்டங்களுடன் அல்ல; உலக நாடுகளை அச்சுறுத்தவே விண்வெளி யுத்தத்துக்கான தயாரிப்பு வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விண்வெளிப் படையை (Space Force) உருவாக்கப் போவதாக அறிவித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உலக ஊடகங்கள் விண்வெளிப் படையின் விளக்கத்தைக் கேட்டனர். விண்வெளியில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை மேலாண்மை செய்வதற்கான கூட்டமாக அது நடந்தது. அதற்கு விளக்கம் அளித்த ட்ரம்ப் விண்வெளி என்பது போரிடுவதற்கான நல்ல தளமாகும். ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை போன்றதுதான் விண்வெளிப்படை. நம்மிடம் விமானப்படை உள்ளது. நம்மிடம் விண்வெளிப்படையும் இருக்கும் என்றார். மேலும், பூமிக்கும் அப்பால் நமது வலிமையை நிரூபிக்க வேண்டும். இது தேசிய அடையாளமாக மட்டுமின்றி தேசத்தின் பாதுகாப்பாகவும் இருக்கும். அமெரிக்காவைக் காப்பது என்று வந்துவிட்டால் விண்வெளியில் அமெரிக்காவின் இருப்பு மட்டும் போதாது. விண்வெளியில் ஆதிக்கமும் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் ஆபத்தானதாகும். அகில உலக மக்களுக்கும் சொந்தமானதுதான் விண்வெளி. அதை ஆதிக்கம் செய்து ஆயுதங்களைக் குவிக்க முடியுமா என்றால் அதனுடைய வரலாறே முடியும் என்ற பதிலை அளிக்கிறது.
விண்வெளியை ஆயுதமயமாக்குவது ஒரு காலத்தில் சாத்தியமில்லாததாகக் கருதப்பட்டது. ஆனால், அதற்கான சாத்தியபாடு 1950களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப்போர் நிலவிய சூழலில் உருவானது. அக்காலகட்டத்தில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் விண்வெளியில் ஆயுத தளவாடங்களைக் குவிப்பதில் மும்முரமாக ஈடுபட்டன. விண்வெளியிலிருந்து ரஷ்யா தாக்குதல்களைத் தொடுக்கலாம் என்ற பதற்றத்தில் அமெரிக்கா சாட்டிலைட்டுக்கு எதிரான தொழில்நுட்பங்களைப் பரிசோதித்து பார்ப்பதில் இறங்கியது. அணு குண்டுகளையும் சாட்டிலைட்டுகளில் பொருத்தி பரிசோதனை முயற்சிகள் நடந்தன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சர்வதேச சமூகத்தினரும் பிற உலக நாடுகளும் விண்வெளி ஒப்பந்தத்தை உருவாக்கினர். ஐநாவின் சார்பாக ஓஎஸ்டீ எனப்படும் விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty - OST) அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் 1967இல் கையெழுத்தானது. அதன் பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. இந்த ஒப்பந்தம் விண்வெளியில் 100 கி.மீட்டருக்கு மேல் எந்த நாடுகளும் ஆயுதங்களைக் குவிக்க பயன்படுத்த அனுமதியில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஒப்பந்தம் எந்த வகையிலும் சந்திரன் உள்ளிட்ட எந்த விண்வெளி கிரகங்களிலும் அல்லது விண்வெளி கற்களிலும் அது போன்ற அமைப்புகளிலும் ஆயுதங்களையோ, பேரழிவு ஆயுதங்களையோ, அணு ஆயுதங்களையோ வைத்திருக்க அனுமதியில்லை என்று மட்டும் கூறியிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் வார்த்தைகளில் விண்வெளியை ராணுவமயமாக்குவதைப் பற்றிக் கூறவில்லை. ஒப்பந்தத்திலுள்ள இந்த ஓட்டையை அமெரிக்காவும் மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளும் பயன்படுத்திக் கொண்டன.
இதற்குப் பின்னர், 1980களில் அப்போதைய அதிபர் ரோனால்டு ரீகன் விண்வெளியை மையமாகக் கொண்டு யுத்தத்துக்கான உத்தியை வகுத்தார். ஓஎஸ்டீயைத் தொடர்ந்து ஆறு ஒப்பந்தங்களும் 30 தீர்மானங்களும் ஐநாவினால் போடப்பட்டன. இவை அனைத்திலும் விண்வெளியை ஆயுதங்களைக் குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது என்பதே மையமாக இருந்தது. ஆனால், இவை அனைத்திலும் விண்வெளியை ஒரு மீடியமாகக் கொண்டு அணு ஆயுதங்களைக் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்துவதற்குத் தடை எதுவும் இல்லை. இதுதான் குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த வகையில் கண்டங்களுக்கிடையிலான பாலிஸ்ட்டிக் ஏவுகணைகள் (Inter-Continental Ballistic Missile – ICBM) 2,000 கி.மீட்டர் தாண்டி தாக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டன.
2001இல் அமெரிக்கா, 1972இல் ரஷ்யாவுடன் கொண்டிருந்த பாலிஸ்ட்டிக் ஏவுகணைகள் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது. இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக விண்வெளியில் ஒரு யுத்தத்துக்கான தயாரிப்புகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன என்பதை அறிந்து கொள்ளலாம். இவற்றைத் தவிர விண்வெளியில் ராணுவமயமாக்குவதைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.
ஓஎஸ்டீ ஒப்பந்தத்துக்குப் பின்னர்,உலகம் எவ்வளவோ மாறி விட்டது. இன்றைக்கு ஐநாவின் மதிப்பீட்டின்படி, 60 நாடுகள் 4,635 சாட்டிலைட்டுகள் விண்வெளியில் பறக்கவிட்டுள்ளன. இவற்றில் 3,000 சாட்டிலைட்டுகள் செயல்படாமல் மிதந்து கொண்டிருக்கின்றன. செயல்படுகின்ற சாட்டிலைட்டுகள் ஆராய்ச்சி மற்றும் ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2005க்குப் பின்னர் தான் மேலே மிதக்கவிடப்பட்டுள்ள மொத்தம் 360 ராணுவ சாட்டிலைட்டுகளில் 227 சாட்டிலைட்டுகளை 22 நாடுகள் மிதக்க விட்டன. மும்முரமான ஆயுதப்போட்டிகள் விண்வெளியில் தொடங்கின. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் விண்வெளிக் கற்களை உடைத்து கனிம வளங்களை எடுத்துக்கொள்ளச் சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான தனியார் கம்பெனிகள் இறங்கியுள்ளன.
இதன் பின்னர் அமெரிக்க விண்வெளி ராணுவ தலைமைத் தளபதி ஜோசப் டபுள்யூ ஆஸி வெளிப்படையாகத் தெரிவித்தார். இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளியிலிருந்து அமெரிக்கா போர் நடத்தும் தகுதியைப் பெறும். பூமியிலுள்ள படைகளை அமெரிக்கா தாக்கும் என்று அறிவித்தார். தொடர்ந்து ரீகனிலிருந்து தற்போதைய ட்ரம்ப் வரை விண்வெளியை ஆயுதமயமாக்குவதற்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் இதுவரை எவ்வளவு ஆயுத தளவாடங்கள் உள்ளன, அவை என்ன வகையைச் சேர்ந்தவை என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளியை ஆயுதமயமாக்குவதற்கு 7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அணு ஆயுதங்களை வைத்து விண்வெளியில் போர் நடத்துவது கற்பனைக்கெட்டாத அழிவுகளை உருவாக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனால், அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு இதுவெல்லாம் புரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக