நீட் தேர்விற்காக 412 பயிற்சி மையங்களில் அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தரமணியில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாஸ்காம் பவுண்டேஷன் இணைந்து பொது நூலக இயக்க மண்டல மாநாடு இன்று (ஜூலை 17) நடத்தியது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " தமிழகத்தைப் பொறுத்தவரையில் 4,622 நூலகங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது. மாநிலத்தில் 13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் உள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகம் அமைக்கப்படும்.
நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள 32 மாவட்ட மைய நூலகங்களில், ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும். அந்தப் பயிற்சி மையங்களில், காணொலி காட்சிமூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும். 412 பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படும். கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் நீட் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டதால் போதிய மருத்துவ இடம் தமிழ்வழி மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நீட் பயிற்சி அளிப்பதால் மாணவர்கள் பயன் பெறுவார்கள்" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக