கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் “முஞ்சிறையில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 2014-15ஆம் கல்வி ஆண்டில் சித்த மருத்துவ படிப்பில் 18 மாணவர்கள் சேர்ந்தோம். நாங்கள் அனைவரும் அனைத்துக் கல்வி கட்டணங்களும் செலுத்தி படித்து வருகிறோம். தமிழ்நாடு எம்ஜிஆர்மருத்துவ பல்கலைக்கழகம் வாயிலாக முதலாமாண்டு தேர்வு அக்டோபர் 2016இல் முடிவடைந்தது. பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இதுவரை மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை.
2017ஆம் ஆண்டு 2ஆம் ஆண்டு படிப்பைத் துவங்கினோம். இரண்டாம் ஆண்டு தேர்வு மருத்துவ பல்கலைக்கழகம் வாயிலாக முஞ்சிறை கல்லூரியில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து சுமார் 11 மாதங்கள் ஆகியும் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை இதனால் எங்களுக்கு 3ஆம் ஆண்டு படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தைக் கேட்டால் மருத்துவ பல்கலைக்கழகம்தான் தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
முதலாமாண்டில் 1, 2 பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள், அந்த பாடத் தேர்வைக் கடந்த அக்டோபரில் எழுதினர். ஆனால் தேர்வு முடிவுகள் வராததால், அவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முஞ்சிறை சித்த மருத்துவக் கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை காலதாமதமின்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக