இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிடிஎஸ் 70 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குள்ள நட்சத்திரத்திற்கு 10 மில்லியனுக்கும் குறைவான வயதே இருக்குமென்றும், மேலும் இதன் துணைக்கோளின் வயது 5 முதல் 6 மில்லியன் வயதுகள் இருக்குமென்றும் தெரியவந்துள்ளது.
பிடிஎஸ் 70பி என்று பெயரிடப்பட்டுள்ள இது வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்குமென்றும், மேலும் அது மேகமூட்டமாக வளிமண்டலத்தை கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
யுரேனஸ் சூரியனை சுற்றிவரும் தூரத்தை போன்று இந்த கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்றிவருமென்று ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டியூட் பார் அஸ்ட்ரானமியின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
இது, குள்ள நட்சத்திரத்தை ஒவ்வொரு முறை சுற்றி வருவதற்கும் 118 வருடங்களாகிறது.
நமது சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கோள்களைவிட அதிகமாக, அதாவது இதன் மேற்பரப்பு வெப்பநிலை 1,000 செல்ஸியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது.
கொரோனாகிராஃப் என்ற கருவியை பயன்படுத்தி மங்கலாக காணப்படும் இந்த கிரகத்தின் ஒளி தடுக்கப்பட்டதன் மூலமே இதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோள்கள் எப்படி உருவாகின்றன?
ஒரு நட்சத்திரம் உருவாகும்போது எஞ்சியிருக்கும் பொருட்களே கிரங்களாக உருவாகின்றன என்ற கோட்பாடு அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலும் வாயு மற்றும் தூசுக்களை கொண்டிருக்கும் இது, உருவான புதிய நட்சத்திரத்தை பரந்த வட்டப்பாதையில் சுற்றி வரும்.
காலப்போக்கில், அந்த சிதைவுகளின் சிறுபகுதிகள் ஒன்றிணைந்து ஒட்டிக்கொள்ளும்.
அவை எந்தளவிற்கு அளவில் விரிவடைகிறதோ, அந்தளவிற்கு புவி ஈர்ப்பு விசையை கொண்டிருக்கும். மேலும், உருவாக்க நிலையிலுள்ள மற்ற கோள்களிடமிருந்து கூடுதல் சிதைவுகளை கவரும்.
அவ்வாறு உருவாகும் அமைப்பு, தனது பாதையை தெளிவாக அமைத்துக்கொள்ளுமானால், புதிய கிரகமாக உருவெடுக்கிறது.
நமது சூரிய குடும்பத்தை அடிப்படையாக கொண்டே இதற்கான கோட்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கவுள்ளனர். பிடிஎஸ் 70பி போன்ற கோள்களை அதன் தொடக்ககாலம் முதலே கவனித்து வந்தால் இதுகுறித்த பல்வேறு செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கு வானியலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக