பி.இ. பாடப்பிரிவுகளான உற்பத்தி பொறியியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படிப்புகளைச் சமமாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஏ.பி.ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் உற்பத்தி பொறியியல் ("சான்ட்விச்') என்ற பாடப்பிரிவில் 5 ஆண்டுகள் பி.இ. படிப்பை முடித்தேன். இந்தப் படிப்பு 4 ஆண்டு இயந்திரவியல் பொறியியல் படிப்புக்குச் சமமானது.
ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்த இரண்டு படிப்புகளையும் சமமாகக் கருத முடியாது எனக் கூறுகிறது.
இந்த இரண்டு படிப்புகளையும் சமமானது என அறிவித்து உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இரண்டு படிப்புகளின் 75 சதவீத பாடத் திட்டம் ஒன்றாக இருந்தால் மட்டுமே, இரண்டு படிப்புகளும் சமமானவை எனக் கருத முடியும் என தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில், 62 சதவீத பாடத்திட்டங்கள் மட்டுமே பொதுவானதாக உள்ளன. நிபுணர் குழுவின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
மேலும், "இதே கோரிக்கையுடன் மனுதாரர் ஏற்கெனவே நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.
இதேபோன்று வழக்குத் தொடர்பவர்கள் குறித்து நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தால், அது மனுதாரரின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
எனவே, ஒரே கோரிக்கைக்காக தொடர்ந்து வழக்கு தொடர்வதை மனுதாரர் தவிர்க்க வேண்டும்' எனவும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக