அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! அசத்திய கிராம மக்கள்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! அசத்திய கிராம மக்கள்*

பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி கிராமத்தினர் எங்க ஊர் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம், ஆயிரம் ரூபாய் பணம் பரிசாக தரப்படும் என அறிவித்து இருந்தனர்.

அதன் படி பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் 28 பேருக்கு தங்க நாணயம் மற்றும் ஊக்கத்தொகையாக பணம் கொடுத்து சொன்னதை செய்ததோடு இதை பள்ளி வளாகத்தில் பெரிய விழாவாகவே நடத்தி அசத்தியிருக்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடிப் பகுதியான பேராவூரணி அருகே உள்ளது துலுக்கவிடுதி கிராமம்.

இந்த ஊருக்கென ஆரம்பத்தில் தனியாக அரசு பள்ளிக்கூடம் இல்லாததால் அனைவரும் பக்கத்து ஊர் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டிய நிலை.

இதனால் கடுமையாக அவதியடைந்து வந்தனர் அப்பகுதி மாணவர்கள்.

இதனால் எங்கள் ஊரிலும் அரசு பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததையடுத்து 1998-ம் ஆண்டு அரசு தொடக்கபள்ளி இங்கு ஆரம்பிக்கபட்டது.

அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அந்தப் பள்ளியில் ஆர்வமுடன் சேர்த்து படிக்க வைத்ததுடன் பிள்ளைகளை போலவே பள்ளிக்கூடத்தையும் நன்றாக கவனித்தனர்.

அதோடு எதற்கும் அரசை எதிர்பார்க்காமல் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களே செய்து கொண்டனர்.

இதன் பின்னர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியாக 2003-ம் ஆண்டு தரம் உயர்த்தி அறிவித்தது அரசு. அந்தச் சமயத்தில் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் அடுத்து படிப்பதற்கு இந்த ஊரை சேர்ந்த மாணவ, மாணவிகள் 5 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டி இருக்கிறது.

இதனால் பல துயரங்களை அனுபவிப்பதோடு பிள்ளைகளின் படிப்பிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.

நன்றாக படித்து இந்தப் பகுதியிலேயே சிறந்து விளங்கும் எங்க ஊர் மாணவர்களுக்காக அவர்களின் நலன் கருதி இதை உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசை கேட்டு கொண்டதோடு அதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியாகவும் தந்தனர்.

ஆனாலும் அரசின் சார்பில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் கடந்த பள்ளி ஆண்டில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தாருங்கள் என ஊரே கூடி கோரிக்கை வைத்தனர்.

அப்போது அதிகாரிகள் இங்கு 83 மாணவர்கள் தான் படிக்கிறார்கள் எண்ணிக்கை ரொம்ப குறைவாக உள்ளது.

120 மாணவர்களுக்கு மேல் இருந்தால்தான் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த முடியும்.

அப்படி நீங்கள் எண்ணிக்கையை அதிகபடுத்தினால் வரும் கல்வி ஆண்டிலேயே உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் பிரகலாதனிடம் பேசினோம்.

'அதிகாரிகள் கூறிய உடனே நாங்கள் எண்ணிக்கையை அதிகபடுத்துவதற்காக அதே மேடையில் எங்க பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் பணம் தரப்படும் என அறிவித்தோம்.

அதன்படி மொத்தம் 28 மாணவர்கள் புதிதாக எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

சொன்னது போலவே அவர்களுக்கு தங்க நாணயம் வழங்குவதை எங்க ஊர் பள்ளி வளாகத்திலேயே எங்க பகுதி எம்.எல்.ஏ கோவிந்தராசு, கல்விதுறை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து விழாவாக நடத்தினோம்.

எங்க கிராம மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது கல்வி அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏவை வைத்து 28 மாணவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் ஊக்கத்தொகையும் கொடுக்க வைத்தோம் என்றார்.

மேலும் பேசிய சிலர், தனியார் பள்ளி மோகத்தில் இருந்து விலகி பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதில் தங்க நாணயம் தருவதும் ஒன்று.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் இங்கு எட்டாவது படித்த மாணவர்கள் பல பேர் உயர்நிலைப் பள்ளியாக மாற்றபடவில்லை என்று மாற்று பள்ளிக்கு சென்று விட்டனர்.

இப்போது புதிதாக சேர்த்த மாணவர்களையும் சேர்த்து 96 மாணவர்கள் படிக்கிறார்கள்.

120 மாணவர்கள் இருந்தால் தான் உயர் நிலைபள்ளியாக மாற்ற முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

அதற்கான முயற்ச்சியில் இருப்பதோடு மீண்டும் உயர் நிலைபள்ளியாக மாற்றுங்கள் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் நிச்சயம் நடக்கும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here