எச்சரிக்கை: வாட்ஸ்அப்பில் போலிச் செய்தியைப் பரப்புவது மூளையை மழுங்கச் செய்யும்; உயிரைக் கொல்லும்.
ஃபேக் மெசேஜ் எனப்படும் போலி மெசேஜ்களை சமூக வலைதளங்களில் பகிர்வது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் அதிகம் போலிச் செய்திகள் பரவுவதில் வாட்ஸ்அப் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வாட்ஸ்அப் குரூப் நபர்களின் எண்ணிக்கையை 256 ஆக அந்நிறுவனம் சமீபத்தில் உயர்த்தியது. 256 நபர்கள் உள்ள ஒரு வாட்ஸ்அப் குழுவில் எங்கிருந்து யார் போலிச் செய்திகளை பரப்புகிறார்கள் என்பதைக் கண்டறிவது என்பது சாத்தியமில்லாதது.
வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும்போது முதலில் அதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய வேண்டும். எந்த ஓர் ஆராய்ச்சியும் இன்றி வருவதை அப்படியே பகிர்வது பல சிக்கல்களில் போய் முடிகிறது.
சில சம்பவங்களின் தொகுப்பு:
சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு தெருவில் வாலிபர் ஒருவர், அங்குள்ள சில குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், குழந்தைகளைக் கடத்துபவர் எனச் சந்தேகித்து எந்த ஓர் உறுதிப்படுத்துதலும் இன்றி அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கடைசியில் அவர் இறந்தே விட்டார். விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் மெசேஜில், குழந்தைகளுக்கு இனிப்புகளில் மயக்க மருந்து கொடுத்து, அவர்களைக் கடத்தி உறுப்புகளைத் திருடும் கும்பல் ஒன்று நகருக்குள் சுற்றிவருவதாக போலிச் செய்தி ஒன்று பரவியது தெரியவந்தது. இந்த போலிச் செய்தி, அநியாயமாக ஓர் உயிரைப் பறித்துள்ளது.
கடந்த மே மாதம் மட்டும் இதே போன்ற சம்பவங்களால் தமிழ்நாட்டில் இருவரும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக குயின்ட் ஊடகத்திலிருந்து வெளிவந்த செய்திகளின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற வாட்ஸ்அப் போலிச் செய்தியால் உயிர் பலிகள் ஏற்படுவது இப்போதுதான் முதன்முறையா? நிச்சயம் இல்லை!
2017ஆம் ஆண்டு பரவிய ஒரு போலி வாட்ஸ்அப் மெசேஜால் ஜார்கண்ட் மாநிலத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி மேற்கு வங்கத்தில் 2017ஆம் ஆண்டு வாட்ஸ்அப்பில் ஒரு பெண்ணின் சேலையை ஒருவர் பிடித்து இழுப்பது போன்ற புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டது. இதனால் ஒரு மதக் கலவரமே உண்டானது. ஆனால், உண்மையில் அந்தப் புகைப்படம், போஜ்பூரி மொழியில் வெளியான படத்தின் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட்.
வாட்ஸ்அப்பில் வரும் செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஆராயாமல் அதை அப்படியே பகிர்வதாலேயே இத்தகைய விபரீதங்கள் நிகழ்ந்துள்ளன.
போலிச் செய்திகளை எப்படிக் கண்டறிவது?
நமக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து வரும் வாட்ஸ்அப் செய்திகளை நாம் பெரும்பாலும் சந்தேகிக்க மாட்டோம். நம் மனதுக்கு அது ஒரு போலிச் செய்தி எனத் தோன்றினாலும், அதைப் பகிர்ந்தவர் அப்படிச் செய்திருக்க மாட்டார் என நம் ஆழ் மனது நம்மை நம்ப வைத்துவிடும். அவர் அனுப்பினால் சரியாகத் தான் இருக்கும் எனக் கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு நாமும் அதை அப்படியே பகிர்ந்து விடுவோம். அதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். வாட்ஸ்அப்பில் யார் வேண்டுமானாலும் போலிச் செய்திகளைப் பரப்ப முடியும் என்பதை நாம் உணர வேண்டும். இதில் நமக்கு வேண்டப்பட்டவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.
முன்பு வாட்ஸ்அப்பில் போலி செய்திகள் பரவுவதில் ஹேக்கர்களின் பங்கு அதிகமாக இருந்தது. ஆனால், இந்த End-To-End Encryption வசதி வந்தபின் அது குறைந்துள்ளது. காரணம், இதில் அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே அந்தச் செய்தியை பார்க்க முடியும். இடையில் உள்ள இடைத்தரகர்கள் எனப்படும் இந்த வாட்ஸ்அப் சர்வர் (Whatsapp Server) அல்லது ஹேக்கர்களோ இதனைப் பார்க்கவோ, மாற்றம் செய்யவோ முடியாது.
இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஒரு பிரபல செய்தி ஊடகத்தின் பெயரில் அதன் டேக் லைன் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி போலிச் செய்திகள் பரவும். அது பிரபலமான ஊடகம் என்பதால் நாமும் யோசிக்காமல் மற்றவர்களுக்குப் பகிர்வோம். இது தவறானது.
அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைக் கீழுள்ள படத்தில் காணலாம். கீழே உள்ள புகைப்படத்தில் ஒரே செய்தி ஊடகங்கள் இரு வடிவில் உள்ளன. அதில் நீல நிற டிக் உள்ளது மட்டுமே உண்மையான ஊடகத்தின் பக்கம். மற்றொன்று போலியானது. இதனை நாம் முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தற்போது 20 கோடி வாட்ஸ்அப் பயனர்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. இதில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியக் குறைந்தபட்சம் ஒரு கூகுள் சர்ச் செய்தாலே போதுமானது. இப்படிச் செய்தால் பல உயிர்ப் பலிகளை நாம் தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக