நீட்டில் அதிக மார்க ஆனால் கலந்தாய்வுக்கு அழைப்பு இல்லை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நீட்டில் அதிக மார்க ஆனால் கலந்தாய்வுக்கு அழைப்பு இல்லை!

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க தனக்கு அழைப்பு இல்லை என நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாற்றுத்திறனாளி மாணவி தனலட்சுமி புகார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள மொத்தம் 3,393 இடங்களுக்கு ஒரு திருநங்கை உள்பட 27,417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 1) தொடங்கியது. நேற்று நடைபெற்ற கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வில் சான்றிதழ் சரியாக இல்லாததால் மூன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், "நீட் தேர்வில் என்னைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு அழைப்பு இல்லை" என சென்னை மணலியைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி நேற்று செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு வரவில்லை என்பதால், தனது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வந்ததாக மாணவி தனலட்சுமி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு நீட் தேர்வில் 106 முதல் 208 மதிப்பெண் பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், 263 மதிப்பெண் பெற்ற எனக்கு அழைப்பு வரவில்லை. இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தேன். ஆனால், அழைப்பு அனுப்பப்படாதது ஏன் எனத் தெரியவில்லை. எனவே அரசும், அதிகாரிகளும் தலையிட்டு கலந்தாய்வில் நான் பங்கேற்க துணை புரிய வேண்டும்" என்று கூறினார்.

சிறப்புப் பிரிவில் அழைப்பு விடுக்கப்பட்ட 101 பேரில் 63 பேர் கலந்தாய்வில் கலந்துகொண்டனர் மீதம் 38 பேர் கலந்துகொள்ளவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 38 எம்பிபிஎஸ் மற்றும் 2 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்று முதல் 7ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here