அண்ணா பல்கலை பேராசிரியர், நாகராஜன் பேசியதாவது: கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வது,
அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பது, ஆன்லைன் கவுன்சிலிங் என, மூன்று கட்டங்களாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் கவுன்சிலிங், அடுத்த வாரத்தில் துவங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியல், தரவரிசை மதிப்பெண் பட்டியல் அடிப்படையில், ஐந்து குழுக்களாக பிரிக்கப்படும்.
கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை தேர்வு செய்ய, கல்லுாரிகளின் விபரங்கள் அடங்கிய கையேடு வழங்கி உள்ளோம்.
அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், மத்திய அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் என, ஆறு பிரிவுகளாக பிரித்து, கையேட்டில் பட்டியல் தரப்பட்டுள்ளது.
*கல்லுாரி ஆய்வு தேவை*
அவற்றில் உள்ள பாடப்பிரிவுகள், இடங்களின் எண்ணிக்கை, கல்வி மற்றும் விடுதி கட்டணம் ஆகிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. அவற்றின் தரவரிசையுடன், கல்லுாரி குறியீட்டு எண்களும் அச்சிடப்பட்டுள்ளன.
கல்லுாரியை தேர்வு செய்யும் முன், கல்லுாரிக்கு நேரில் சென்று விசாரித்த பின், அவற்றை தேர்வுசெய்வதே, சிறந்த முறை.இந்த ஆண்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இன்ஜி., படிப்பில் சேர காத்திருக்கின்றனர்.
பாடப்பிரிவுகள் துவங்கப்பட்ட காலம், அதில் படித்தோரின் நிலை, விடுதி வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கல்லுாரியை தேர்வுசெய்யுங்கள்.பாடப் புத்தகத்தை தாண்டி, மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.
*குறியீட்டு எண் முக்கியம்*
கவுன்சிலிங்குக்கு முன், பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை ஆய்வு செய்து, 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை, கல்லுாரிகளின் குறியீட்டு எண்களுடன் தயாராக வைத்திருக்க வேண்டும்.
தெரியாதவர்களிடம் உதவி கேட்பது, மிகவும் ஆபத்தானதாக முடியும். ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கான, பயன்பாட்டாளர் குறியீட்டு பெயர், ரகசிய குறியீடு மற்றும் மொபைல் எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
அதை தெரிந்து கொள்பவர், உங்களின் விருப்ப பாடத்தை மாற்றி பதிவு செய்ய வாய்ப்புள்ளது.ஒரே மாதிரியான பெயரில், சிறிய மாற்றங்கள் உடைய பல கல்லுாரிகள் இருப்பதால், அவற்றின் குறியீட்டு எண்ணை வைத்து, கல்லுாரிகளை முடிவு செய்ய வேண்டும்.
கவுன்சிலிங்குக்கான உதவி மையங்களில், அண்ணா பல்கலையால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதை தவிர, மற்ற உதவிகளை மாணவர்களுக்கு செய்வர்.
எப்படி நடக்கும்? :
ஆன்லைன் கவுன்சிலிங், ஐந்து நாட்கள் நடக்கும். முதல் மூன்று நாட்கள், 'சாய்ஸ் பில்லிங்' எனப்படும், விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம்.அந்த பாடத்தை உறுதி செய்ய, அடுத்த இரண்டு நாட்கள் வழங்கப்படும்.
அனைத்தும் முடிந்த பின், விண்ணப்பத்தை, கடைசி நாளில், 'லாக்' செய்வதே சிறந்த முறை.அனைத்து விபரங்களும், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன; அவற்றை படித்து பார்த்து முடிவெடுக்கலாம்.
சந்தேகம் இருந்தால், கவுன்சிலிங் உதவி மையத்தையோ, அண்ணா பல்கலையின் குறை தீர்வு மற்றும் உதவி மையத்தையோ நேரில் அணுகி, விளக்கம் பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக