சந்தையூர் கோவில் சுற்று சுவர் விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சந்தையூரில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலைச் சுற்றி, தேவேந்திரகுல மக்களால் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது தீண்டாமை சுவர் எனக் கூறிய அருந்ததியர் இன மக்கள், சுவரை இடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி, தீண்டாமை சுவரை இடிக்க உத்தரவிட்டனர். அதன்படி, இந்தச் சுவரின் ஒரு பகுதி, கடந்த ஏப்ரல் மாதம் இடிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, கோயில் நிர்வாகி கருப்பசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடந்த ஏப்ரலில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று (ஜூலை 2) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தீண்டாமை சுவர் சம்பந்தமான ஆவணங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக