சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்ற புதன்கிழமை வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார்.
தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் எஸ்.டி.உபசானி, கடற்படை பொறுப்பு அதிகாரி (தமிழகம்-புதுச்சேரி) வித்யான்சு ஸ்ரீவத்சா, விமானப்படை அதிகாரி எம்.எஸ்.அவானா, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படைத் தலைவர் எஸ்.பரமேஷ், காவல் துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் விஜய்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா அறிமுகம் செய்து வைத்தார்.
காவல் துறையின் அணி வகுப்பை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது:
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு... தமிழகத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில்,அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும், தேசிய அளவிலான முதுநிலைப் போட்டிகள், தமிழக அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றாலோ, தமிழகம் சார்பாக கலந்து கொண்டால்கூட அவர்களுக்கு அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.