என்சிஇஆர்டிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

என்சிஇஆர்டிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம்!



வனத் துறை அனுமதியின்றி மரம் வெட்டியதற்காக, டெல்லியிலுள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


டெல்லி அரபிந்தோ சாலையில் அமைந்துள்ளது என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று இங்குள்ள ஐந்து மரங்கள் வெட்டப்பட்டதாகவும், 33 மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டதாகவும் வனத் துறைக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் புகார் அளித்தது. இது தொடர்பாக, வனத் துறை ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.

டெல்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டப்படி, மரங்களை வெட்டுவதற்கும் அதன் கிளைகளை நீக்குவதற்கும் முறைப்படி அனுமதி பெற வேண்டும். இதுபற்றி, வனத் துறையினரிடம் அனுமதி வேண்டி என்சிஇஆர்டி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான அனுமதியைப் பெறும் முன்னரே மரங்கள் வெட்டப்பட்டன. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று என்சிஇஆர்டி அலுவலகத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர் வனத் துறை அதிகாரிகள். அங்கிருந்த என்சிஇஆர்டி பதிவாளரிடம் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதாகத் தெரிவித்தனர்.

இது, சட்டத்தை அலட்சியமாகக் கருதுபவர்களுக்கு ஒரு பாடம் என்று தெரிவித்துள்ளார் மரம் வெட்டப்படுவதாகப் புகார் அளித்த வெர்ஹைன் கன்னா. வேலியை ஒட்டியிருந்த யூகலிப்டஸ் மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் வெட்டப்பட்டதாக, அவர் வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், இதற்கு என்சிஇஆர்டி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசிய கல்வித் திட்டம் மற்றும் நிர்வாக நிறுவனம் அந்த வளாகத்தில் தனியாகச் செயல்படுவதாகவும், அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மட்டுமே மரங்கள் வெட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக, வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் தெற்கு டெல்லியில் சுமார் 16,000 மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here