உலக வர்த்தக விதிகளுக்கு உட்பட்டு வளர்ந்த நாடுகள் அவற்றின் விவசாயிகளுக்கு அளித்து வரும் மானியத் தொகையைக் குறைக்க வேண்டுமென்று இந்தியாவும் சீனாவும் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பருத்தி, கம்பளி மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறி மானியம் வழங்கப்பட்டு வருவதாக இந்தியாவும் சீனாவும் இணைந்து உலக வர்த்தக அமைப்பிடம் முறையிட்டுள்ளன. இதனால் 160 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் சீர்குலைந்துள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் முறையிட்டுள்ளன.
வளர்ந்த நாடுகள் தங்களது விவசாயிகளுக்கு 5 விழுக்காடு மட்டுமே மானியம் வழங்க வேண்டுமென்று உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளில் உள்ளது. ஆனால், மேற்கண்ட நாடுகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக மானியம் வழங்கி வருவதாக இந்தியாவும் சீனாவும் குற்றம்சாட்டியுள்ளன. எனவே அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவும் சீனாவும் இணைந்து வளர்ந்த நாடுகளின் மானியத் திட்டங்களுக்கு எதிராகப் புகாரளிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டிலும் இதுபோன்ற புகார் ஒன்றை இரு நாடுகளும் அளித்திருந்தன. கடந்த ஆண்டில் அமெரிக்கா உலர்ந்த பட்டாணிக்கு 57 விழுக்காடும், நெல்லுnக்கு 82 விழுக்காடும், கடுகு எண்ணெய்க்கு 61 விழுக்காடும், ஆளி விதைக்கு 69 விழுக்காடும், சூரியகாந்தி எண்ணெய்க்கு 65 விழுக்காடும், சர்க்கரைக்கு 66 விழுக்காடும், பருத்திக்கு 74 விழுக்காடும், அங்கோரா ஆட்டுத் தோலுக்கு (மொஹேர்) 141 விழுக்காடும், கம்பளிக்கு 215 விழுக்காடும் மானியம் அளித்ததாகக் குற்றம்சாட்டியிருந்தது.
அதேபோல கடந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் வெண்ணெய்க்கு 71 விழுக்காடு மானியமும், பால் பவுடருக்கு 67 விழுக்காடும், ஆப்பிள்களுக்கு 68 விழுக்காடும், வெள்ளரிக்காய்க்கு 86 விழுக்காடும், எலுமிச்சைக்கு 60 விழுக்காடும், பேரிக்காய் பதப்படுத்துவதற்கு 82 விழுக்காடும், அன்னாசிப் பழங்களை டின்னில் அடைப்பதற்கு 108 விழுக்காடும், தக்காளி பதப்படுத்துவதற்கு 61 விழுக்காடும், நெல்லுக்கு 66 விழுக்காடும், ஆலிவ் எண்ணெய்க்கு 76 விழுக்காடும், வெள்ளை சர்க்கரைக்கு 120 விழுக்காடும், புகையிலைப் பொருட்களுக்கு 155 விழுக்காடும், பட்டுப் புழுக்களுக்கு 167 விழுக்காடும் மானியமாக வழங்கியது எனவும், சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு எதிரான இவற்றை வளர்ந்த நாடுகள் பின்பற்றக் கூடாது எனவும் முறையிடப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் சீனாவின், அமெரிக்காவுடனான வர்த்தக நடைமுறைகள் சில மாதங்களாக நெருக்கடியையும், விவாதங்களையும் உண்டாக்கி வரும் நிலையில் வளர்ந்த நாடுகளுக்கு எதிரான புகாரை இரு நாடுகளும் ஒன்றாக அளித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக