இந்தியாவின் 72ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர், தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த்
ஆகஸ்ட் 15 ஒவ்வோர் இந்தியனுக்கும் புனித நாள். நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்கள் அனைவரையும் நினைவுகூருவோம். பெண்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
நம் பாரத நாட்டிற்கு வணிகம் செய்வதற்காக வந்து, படிப்படியாக நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிமையான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழி வகுக்கக்கட்டும் என தேமுதிக சார்பில் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர், ராமதாஸ்
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சீரழிக்கும் சக்திகளாக மதுவும் புகையும் மாறி வருகின்றன. இவற்றை உயிர்க்கொல்லிகளாகப் பார்த்து, தடை செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இவற்றை வருவாய் ஆதாரங்களாகப் பார்ப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.
இந்த அரசைத் தூக்கி எறிந்துவிட்டு மக்கள் நலன் காக்கும் அரசை அமைப்பதன் மூலமாக மட்டுமே சமத்துவமான, ஊழல் இல்லாத, மது மற்றும் புகையற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். எனவே, அந்த இலக்கை நோக்கி முன்னேற இந்தியாவின் விடுதலை நாளான இந்த நன்னாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
அமமுக துணை பொதுச்செயலாளர், டிடிவி தினகரன்
நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்வுக்கும், அரசும், பொது மக்களும் தங்களுக்கான பங்களிப்பைச் சிறப்பாக மேற்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் செயல்பட்டு வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த முன்வர வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலச் செயலாளர் முத்தரசன்
பல கனவுகளோடும், கற்பனைகளோடும் விலை மதிப்பற்ற பல்லாயிரக்கணக்கான இன்னுயிர்களை ஈந்து பெற்ற இவ்விடுதலை நன்னாளில், அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவைக் காப்பாற்ற, இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்று, வெறியூட்டுகிற தீய சக்திகளிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும், அரசியல் சட்ட அடிப்படைகளையும் காப்பாற்ற சங்கற்பம் மேற்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற, சாதி, மத, பாலின பேதமில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தியாகிகளின் கனவை நனவாக்க இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்.
சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் போராடி விடுதலை பெற்றோம். கருத்துரிமை எங்கள் பிறப்புரிமை என்று உரத்து முழங்க வேண்டிய காலமிது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கருத்துரிமை காத்து நிற்க இந்த சுதந்திரத் திருநாளில் உறுதியேற்போம்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா
சோதனைகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தின் நற்பலன் சென்றடைய அனைவரும் பாடுபட இந்தச் சிறப்பான நாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக. கருத்துச் சுதந்திரம், சுற்றுச்சூழல் தூய்மையைக் காக்கும் சுதந்திரம், பெரும் முதலாளித்துவ வணிக அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் முதலியவற்றை அனைத்து மக்களும் அனுபவிக்கும் வகையில் ஜனநாயக ரீதியில் அரசமைப்புச் சட்டம் காட்டும் வழியில் சளைக்காமல் உழைக்க இந்தத் திருநாளில் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக