முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக அவரது அஸ்தி, மாலை சென்னை கொண்டுவரப்படவுள்ளது. .
முன்னாள் பிரதமரும், பாஜக. மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 17ஆம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை நாட்டில் உள்ள முக்கிய நதிகள் அனைத்திலும் கரைக்க பாஜக சார்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 22) காலை 9.30 மணியளவில் டெல்லி பாஜக அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாஜக மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்கினர். 29 மாநிலத் தலைவர்களும், 9 யூனியன் பிரதேச தலைவர்களும் அஸ்தியைப் பெற்றுக்கொண்டனர்
வாஜ்பாய் அஸ்தியைத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டனர். .
டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்று மாலை 4.30 மணியளவில் அஸ்தி கொண்டு வரப்படும். அஸ்தி கலசத்துடன், விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் ஊர்வலம் நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 23ஆம் தேதி மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக . பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அஸ்தி கலசம் வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, ஈரோடு ஆகிய 6 இடங்களுக்கு ஊர்வலமாக அஸ்தி கொண்டு செல்லப்பட்டு ஆறுகளில் கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், “சென்னை கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கடலிலும், மற்ற இடங்களில் காவிரி, வைகை ஆற்றிலும் அஸ்தி கரைக்கப்படவுள்ளது. அஞ்சலி செலுத்தும், வகையில் எங்கள் கிராமத்துக்கு நீங்கள் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருவதனால் அதிக இடங்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகள் மற்றும் பல அமைப்புகளும் அஞ்சலி செலுத்துவதற்காக எங்களைத் தொடர்பு கொண்டு கேட்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் 26ஆம் தேதி பவுர்ணமி அன்று அஸ்தியைக் கரைக்கவுள்ளோம். வரும் 28ஆம் தேதி சர்வக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு அஞ்சலி கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு அனைத்துக் கட்சியினரையும் அழைக்கவுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக