ஜான்சன் அண்ட் ஜான்சனின் தயாரிப்புகள் தரமற்றவையா?
ஜான்சன் அண்ட் ஜான்சனின் கம்பெனியின் தயாரிப்பான இடும்பு எலும்பு மாற்றுக்கான கருவியைப் பொருத்தியதால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 24) இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் லைவ் மின்ட் நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் கூறியுள்ளதாவது:
உலக மருந்துக் கம்பெனியான ஜான்சன் அண்ட் ஜான்சனின் தயாரிப்பான இடும்பு எலும்பு முறிந்து போனால் அதற்கு மாற்றாக அறுவை சிகிச்சை செய்து வைக்கப்படும் செயற்கை இடுப்பு எலும்புகளின் பாதிப்புகள் குறித்து விவரங்களை அந்த கம்பெனி மறைத்து விட்டது. இந்த மாற்று செயற்கை எலும்புகள் தரக்குறைவானவை.
கடந்த பிப்வரியில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழு 12 மாதங்களாக ஆய்வு செய்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
அரசின் அறிக்கையின்படி, இம்மாற்று செயற்கை இடும்பு எலும்புகள் 3,600 பேருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வைக்கப்பட்டன. ஆனால், இவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 254 பேருக்கு மறுபடியும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2017இல் அமெரிக்காவில் இக்கம்பெனியின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் 8,000 பேருக்கு 2.47 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக அளிக்கப்பட்டது. ஆனால், இதே இழப்பீடு இந்தியாவிலுள்ளவர்களுக்கு அளிக்கப்படவில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு அந்த கம்பெனி எந்தத் தகவலும் அளிக்கவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் தரப்படவில்லை.
சர்ச்சைக்குரிய இந்த தயாரிப்புகள் அமெரிக்காவிலுள்ள இக்கம்பெனியின் கிளையான ஏஎஸ்ஆர் ஹிப் ரிசர்ப்பேசிங் சிஸ்டம் என்ற கம்பெனியால் தயாரிக்கப்பட்டவை. இவற்றுக்கு 2005இல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி அளித்தது. ஆனால், 2010இல் இந்தத் தயாரிப்புப் பொருட்களிலிருந்து ரசாயனங்கள் கசிந்து அவை நோயாளியின் உடலுக்குள் சென்றதால் நிலைமை விபரீதம் ஆனது. சிலருக்கு அவை விஷமாகின. சிலரின் உடலின் திசுக்களை செயற்கை இடுப்புகளின் உலோகங்கள் கிழித்துவிட்டு பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் இந்தப் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டன. இவ்வளவு மோசமான தயாரிப்புகளை கம்பெனி தயாரித்து வருவது உலகமெங்கும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலையில் கம்பெனியின் டால்கம் பவுடரை பயன்படுத்தியதால் 22 பெண்களுக்குச் சினை முட்டைப்பையில் புற்றுநோய் வந்தது. இதனால் கம்பெனி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.7 பில்லியன் டாலர்கள் இழப்பீடாக அளிக்கப்பட்டன. அவர்கள் தொடர்ந்த வழக்கில் கம்பெனியின் பவுடரில் ஆஸ்பெட்டாஸ் துகள்கள் இருந்ததாகக் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக