அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட நான்கு வளாகங்களில் பயிலும் பொறியியல் பட்டப்படிப்ப மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
“கல்வியை காவியமாக்கும் பாஜகவின் முயற்சி இதுவென்றும், இதற்கு மாநில அதிமுக அரசு பலியாகிவிட்டது” எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோரும், மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, “பொறியியல் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு பகவத் கீதை கட்டாய பாடமாக இருக்காது. விருப்பப் பாடமாகவே இருக்கும்” என்று அண்ணா பல்கவைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கம் அளித்திருந்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில், இந்த விவகாரம் குறித்து உரிய விளக்கம் கேட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் தருமபுரியில் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு, “அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பகவத் கீதை கட்டாய பாடமாக இருக்காது. இதனை விருப்பப் பாடமாக மாற்றும் நிர்வாக ரீதியிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோன்று, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் தேர்வுக்குழுவின் தேர்வில் சமஸ்கிருதம் இடம்பெறவில்லை.
உயர் கல்வித் துறையில் 2,340 உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்படவுள்ளனர்” என அமைச்சர் பதிலளித்தார்.