வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அபராதத்திலிருந்து தப்புவது எப்படி என்பது குறித்து காவலர் ஒருவர் ஆலோசனை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலானது முதல் வாகன ஓட்டிகள் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள். ரூ.10,000 எல்லாம் சர்வசாதாரணமாக அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அச்சுறுத்தும் அபராதத் தொகையிலிருந்து தப்புவது எப்படி என்று சுனில் சந்த் என்ற காவலர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் தோன்றும் காவலர் சுனில் சந்த் இந்தியில் பேசுகிறார். அதில் காவலர் சுனில் சந்த், ”புதிய மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம், மாசுக்கட்டுப்பாடு குறித்த சான்றிதழ் இல்லை என்றால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். வெறும் ரூ.100 கொடுத்து இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வழி இருக்கிறது.
இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். வெறும் ரூ.100 கொடுத்து இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வழி இருக்கிறது.
காவலர் அளிக்கும் சலானை எடுத்துக் கொண்டு எந்த ஆவணம் இல்லையோ அந்த ஆவணத்தைப் பெற முயற்சிக்கலாம். ஒருவேளை வீட்டில் ஓட்டுநர் உரிமைத்தை மறந்து வைத்திருந்தால், சலானைப் பெற்றுக் கொண்டு வீடு சென்று உரிமத்தை எடுத்துவந்து காட்டி வெறும் 100 ரூபாய் அபராதத்தோடு தப்பலாம்.
வண்டிக்கு சம்பந்தமாக அனைத்து ஆவணங்களையும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் காண்பித்து பிரச்சினையிலிருந்து முழுமையாகத் தப்பிக்கலாம். இப்படி செய்வதால் அதிக நேரம் விரயம் ஆகும் என்றாலும், பெரும் அபராதத் தொகையிலிருந்து தப்பிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
இது ஹெல்மெட், சீட் பெல்ட் போன்ற விதிமீறல்களுக்கு அவர் சுட்டிக்காட்டவில்லை. ஆவணங்கள் அதாவது ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்றவற்றிற்கே குறிப்பிடுகிறார்.
தமிழகத்தில், தற்போது அபராதத் தொகை அனைத்துமே பிஓஎஸ் மெஷின் மூலமே வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை வாகன ஓட்டியிடம் எந்தவித கார்டும் இல்லாவிட்டால் அவருக்கு அபராத ரசீது தரப்படுகிறது.
அதில் கொடுக்கப்பட்டுள்ள தொகையை 30 நாட்களுக்குள் இ சேவை மையத்தில் செலுத்த வேண்டும். அதேபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தைத் தவிர வேறு எந்த விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டாம் என்பது வாய்மொழி உத்தரவாகவே இருக்கிறது.