இன்று பிறந்த நாள்:- அக்டோபர்-30.
இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு
இயற்பியலாளர்,
இந்திய அணுவியல் துறை தந்தை-
ஹோமி ஜஹாங்கீர் பாபா
(Homi Jehangir Bhabha) பிறந்த தினம்.
பிறப்பு:-
அக்டோபர்- 30, 1909 ஆம் ஆண்டு
மும்பை, இந்தியாவில் பிறந்தார். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் படித்தவர். தனது ஆரம்பகல்வி மற்றும்
பட்டப் படிப்பு முடித்தவுடன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக அவரை பெற்றோர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு 1927 இல்
அனுப்பி வைத்தனர்.
1930-ல் பாபா எந்திரவியல்
படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
1934-ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
பாபா கேம்பிாிட்ஜ் பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆசிாியராக பணியாற்றினார். பெங்களுாில் இந்திய அறிவியல் கழகத்தில் பேராசிாியர் பணியை மேற்கொண்டார்.
ஆய்வுகள்:-
1935-இல் துகள் மின் இயக்கவியலில் (Quantum ElectroDynamics) எலக்ட்ரான்- பாசிட்ரான் நுண்துகள்களிடையிலான கதிர்வீச்சுச் சிதறல் குறித்த பாபாவின் சிறப்பான ஆய்வறிக்கை ராயல் சொஸைட்டி இதழில் வெளியானது. பின்னாளில் அதற்கு ‘பாபா கதிர்வீச்சுச் சிதறல்’ என்று (Bhabha Scattering) பெயரிடப்பட்டது.
1937-இல் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி ஹைட்லருடன் இணைந்து அவர் மேற்கொண்ட அண்டக்கதிர் (Cosmic rays) தொடர்பான ஆராய்ச்சி அவருக்கு மிகுந்த புகழைத் தந்தது. அவற்றில் “மேசான்’ (Meson) எனப்படும் அடிப்படைத் துகள் இருப்பதை கண்டறிந்தார்.
இரண்டாம் உலகப்போர் துவங்கியபோது (1939) தாய்நாடு திரும்பி, பெங்களூரில் இயங்கிய இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.
அதன் தலைவராக இருந்தவர் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியான சர் சி.வி.ராமன். அப்போது அவருக்குக் கிடைத்த டாடா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிதியுதவியைக் கொண்டு, அண்டக் கதிர் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். இது அணுக் கருவியலில் (Nuclear Physics) இந்தியாவின் துவக்கத்துக்கான முதல் புள்ளி ஆகும்.
காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.
அமெரிக்காவில், 1942-ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார்.
இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியபோது அணுக்கருவியல் உள்ளிட்ட உயர் இயற்பியல் துறைகளில் ஆராய்ச்சி செய்யத் தேவையான போதிய வசதிகள் நமது நாட்டில் இல்லை என்பதை உணர்ந்த பாபா, தொரப்ஜி ஜாம்ஷெட்ஜி டாடாவின் உதவியை நாடினார். அவரது உதவியுடன் 1944-இல் அடிப்படை அறிவியலுக்கான டாடா ஆராய்ச்சி நிறுவனத்தை (tifr- Tata Institute of Fundamental Research) மும்பையில் நிறுவினார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமர் நேருவிடம் விவாதித்து, இந்தியா அணு ஆராய்ச்சியில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து,1948-இல் இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission of India) நிறுவப்பட்டது.
மும்பை மாகாண அரசு டிராம்பே என்ற இடத்தில் வழங்கிய அரசு நிலத்தில் 1954-இல் டிராம்பே அணு ஆராய்ச்சி மையத்தைத் துவங்கினார். அது தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என்ற பெயரில் இயங்குகிறது.
மின்னணுவியல், விண்வெளி அறிவியல், நுண்ணுயிரியல், மின்காந்த வானியல் துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்று, முதல் அணு உலை, 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.
மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவை அடுத்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.
உலகிலேயே வேறெங்கும் இல்லாத புதுமையாக, தோரியம் தனிமத்தைப் பயன்படுத்தி அணு மின்சக்தி உற்பத்தி செய்யும், மூன்றுநிலை அணு மின்சக்தி திட்டத்தை (Three- Stage Nuclear Power Programme) வடிவமைத்தார்.
அணு ஆற்றலுக்கு அடிப்படைத் தனிமமான யுரேனியம் இந்தியாவில் குறைவாக இருப்பதால், தோரியம் தனிமத்தை தேர்வு செய்தார். தென் இந்திய கடற்கரைகளில் அதிக அளவில் கிடைக்கும் மானசைட் (monazite) கனிமப் படிவுகளில் இருந்து பெறப்படும் தோரியம் தான் இப்போது நம்மை அணு ஆற்றல் நாடாக்கி இருக்கிறது.
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின.
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்தார்.
18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகள் ஆகும்.
விருதுகள்:-
1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது,
மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருது- (1941),
ஆடம்ஸ் விருதும்- (1942) போன்ற விருது பெற்றார்.
ஆராய்ச்சி கட்டுரை:-
1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது.
மறைவு:-
1966 ஆம் ஆண்டு ஜனவரி-24 ஆம் நாள்
ஸ்விட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.
மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' (Bhabha Atomic Research Centre )
எனப் பெயரிடப்பட்டது.
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்தது.