ஒரு குழந்தையின் உயிர் பிரச்சனையில் ஏன் இந்த படிப்படியான நடவடிக்கை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒரு குழந்தையின் உயிர் பிரச்சனையில் ஏன் இந்த படிப்படியான நடவடிக்கை




மணப்பாறை அருகே நடுக்காடுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித் தவறி விழுந்து 2 நாட்கள் ஆகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறது. ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. முதல் நாள் 3 அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு மாநில அரசே குழந்தையை மீட்கும் பணியை முடுக்கிவிட்டது.
நேற்று முன் தினம் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் 25 அடி ஆழத்தில் இருந்தபோது முதலில் தீயணைப்பு படை வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பிறகு, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காக புதிய கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டன் வந்து மீட்பு பணி முயற்சியில் ஈடுபட்டார். அவராலும் முடியவில்லை. சிறிது நேரத்தில் கோவையில் இருந்து வந்த ஒரு குழுவினர் மீட்பு பணியில் இணைந்தனர். அவர்களாலும் குழந்தையை மீட்க முடியவில்லை. இதையடுத்து, ஐஐடி குழுவினர் தாங்கள் கண்டுபிடித்த பிரத்யேக கருவியுடன் குழந்தையை மீட்க வந்தார்கள்.
குழந்தை மீட்கப்பட்டுவிடுவான் என்று என்று எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், மீட்பு பணியின் போது குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்றுவிட்டான். நிலைமை மேலும் சிக்கலானது. அதுவரை குழந்தை உணர்வுடன்தான் இருந்தான்.
குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் 60 அடி ஆழத்தில் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் இருந்து ஒரு மீட்புக் குழுவினர் வந்தனர். அவர்களாலும் குழந்தையை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதனிடையே குழந்தை சுர்ஜித் 88 அடி ஆழத்தில் குழந்தை சென்றுவிட்டான்.
மேலும், குழந்தை ஆழத்திற்கு செல்வதற்குள் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்க ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அப்பகுதியில் மண்ணின் தன்மை கடுமையாக இருப்பதால் அந்த ரிக் இயந்திரத்தின் திறன் போதாது என்று ராமநாதபுரத்தில் இருந்து சக்தி வாய்ந்த அதிக திறன் கொண்ட ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு மழையிலும் மீட்பு பணி தொடர்கிறது.
தமிழக அரசு நிர்வாகம் குழந்தை சுர்ஜித்தை மீட்பதில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதில் எந்த விமர்சனமும் இல்லை. உண்மையில் பாராட்டப்பட வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கைகள் எல்லாமே படிப்படியான அடுத்த கட்ட நடவடிக்கைகளாக உள்ளன.
எல்லா நடவடிக்கைகளும் முயற்சிகளாக மட்டுமே இருக்கின்றன. வேறு ஏதாவது என்றால் பரவாயில்லை. படிப்படியாக அடுத்தடுத்த முயற்சிகள் என்று இருக்கலாம். ஆனால், இது குழந்தையின் உயிர்பிரச்னை இதில் படிப்படியான நடவடிக்கையை மேற்கொள்வது சரியா? அரசு நிர்வாகம் முதல் கட்டத்திலேயே உச்சபட்ச நடவடிக்கையை முயற்சித்திருக்க வேண்டும்.
சாதாரண மக்களிடம் இருந்து ஒரு குரல் ஒலிக்கிறது “நிலவுக்கு ராக்கெட் அனுப்புறாங்களாம்?
ஆனால், இவர்களால், போர்வெல்லில் விழுந்த குழந்தையை மீட்க முடியவில்லையாம்” என்று கேட்கிறார்கள். இந்த கேள்வி பாமரத்தனமாக இருக்கலாம் ஆனால், அதில் நியாயம் இல்லாமல் போய்விடவில்லை.
இப்படியான நிகழ்வுகள் மூலமாகவாது அரசு நிர்வாகம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு குழந்தை சுர்ஜித்தை மீட்க மேலும் அடுத்தடுத்த முயற்சிகள் என்று பரீட்சித்துப் பார்க்காமல் உச்ச பட்ச நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Subscribe Here