தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் தற்காலிகமாக 1,311 விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தியது.
அவ்வாறு நடத்தப்பட்ட விரிவுரையாளர் தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதனையடுத்து, விரிவுரையாளர் பணிக்கான அந்த தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்ததால், அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமலே இருந்தது.
இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்கலாம், அதற்கு எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தற்போது நிரந்தர விரிவுரையாளர்களை நியமிக்கும் வரையில், அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 1,131 தற்காலிக விரிவுரையாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், முழுநேர விரிவுரையாளர்களாக செயல்படுவர்.
ஏற்கனவே, AICTE நெறிமுறைகளின்படி, இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1:20 என்ற விகிதத்தில் ஆசிரியர்: மாணவர்கள் இருக்க வேண்டும். இதே போல், பாலிக்டெக்னிக் கல்லூரிகளில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும். அதன்படியே, தற்போது தற்காலிக விரிவுரையாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.