கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 930க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன
. நாடளுமன்ற மக்களவையில் எதிர்கட்சியினரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் 930க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஜார்க்கண்ட் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் பள்ளி ஒன்றில் உணவு சாப்பிட்ட பின்னர் 259 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். இந்த ஆண்டில் மகாராஷ்டிராவில் 201, உ.பி.யில் 153 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 2017, 2018 மற்றும் 2019ம் (நவம்பர் வரை) ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50யைத் தாண்டவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் ஊழல் தொடர்பாக மொத்தம் 52 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அதிக ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான். மத்திய உணவுத்திட்டம் இந்தியாவில் 11.4 லட்சம் அரசுப் பள்ளிகளில் 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது
. இந்நிலையில், பள்ளிகளில் மதிய உணவின் தரம் மற்றும் அளவை சோதித்துப் பார்க்க சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குழு நியமிக்கப்பட்டு, இதனை கண்காணிக்கும் பணி தொடங்கப்படும். அந்தந்த பள்ளியின் ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளைப் பொறுத்து கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் நியமிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமாக சுமார் 2 லட்சம் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்குமாறு மாநிலங்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நவம்பர் மாதத்திற்குள் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.