சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவரான கிருஷ்ண சிவுகுலா, விடுதியைச் சீரமைக்கக் கோரி ரூ.5 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்தோ-அமெரிக்க எம்.ஐ.எம். டெக் தனியாா் நிறுவன தலைவருமான கிருஷ்ண சிவுகுலா,சென்னை ஐஐடியின் விடுதி மற்றும் சில கட்டமைப்புகளைச் சீரமைக்க ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடை மூலம் சென்னை ஐஐடி.,யில் 1961-ல் கட்டப்பட்ட காவேரி மாணவர் விடுதி உலகத் தரத்திலான வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட உள்ளது.
இவர் ரூ.2.5 கோடியை சென்னை ஐஐடி.,யிடம் அளித்துவிட்டார். அவருடைய நன்கொடை மூலம் தற்போது இரண்டு மாணவர் விடுதிகள் சீரமைக்கப்பட உள்ளன என்று ஐஐடி, சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ண சிவுகுலா கூறுகையில்,
எந்தவித கட்டணமின்றி உலகத் தரத்திலான தொழில்நுட்ப கல்வியை சென்னை ஐஐடி நிறுவனம் எனக்கு அளித்தது. இதனால், ஹார்வர்டு பல்கலையில் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற முடிந்தது. என்னை வாழவைத்த சென்னை ஐஐடி.க்கு உதவுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போல் பிற மாணவர்களும் கல்வி வாய்ப்பை பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.