மத்தியபிரதேச மாநிலம் மோகனா என்ற இடத்தை சேர்ந்தவர் ரவிகுப்தா . ஏழை தொழிலாளி.
இவர் மீது வருமான வரித்துறை ரூ.132 கோடி வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக புகார் கூறி நோட்டீசு அனுப்பி உள்ளது. அந்த பணத்தை உடனே கட்டாவிட்டால் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அனுப்பிய கடிதத்தில் ரவிகுப்தா குஜராத்தில் வைர வியாபார நிறுவனம் நடத்துவதாகவும் அதில் 2011 செப்டம்பர் 9-ந்தேதி முதல் 2012 பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை வங்கி கணக்குக்கில் பல கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரூ.132 கோடிக்கு நிதி பரிமாற்றம் செய்திருக்கிறீர்கள். இதற்கான கணக்குகளை தாக்கல் செய்து வரியை கட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ள அந்த கால கட்டத்தில் ரவிகுப்தா இந்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் மாதம் 6 ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்த்து வந்தார்
. ஆனால் அவர் வைர நிறுவனம் நடத்தி வந்ததாக வருமான வரித்துறை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவரது பெயரில் பான் கார்டும் எடுக்கப்பட்டு இருக்கிறது.
ரவிகுப்தாவுக்கு ஏற்கனவே 2019 மார்ச் மாதம் ஒரு நோட்டீசு வந்தது. அதன்பிறகு ஜூலை மாதமும் ஒரு நோட்டீசு வந்தது. அதை அவர் கண்டு கொள்ளவில்லை.
இப்போது மீண்டும் நோட்டீசு அனுப்பப்பட்டிருப்பதுடன் சொத்து பறிமுதல் செய்யப்படும் என்று கூறியிருப்பதால் அதிர்ச்சி அடைந்த அவர் வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. ரவிகுப்தா பெயரை பயன்படுத்தி யாராவது போலியாக நிறுவனத்தை நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதுபற்றி விசாரணை நடப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
ஏற்கனவே வந்த நோட்டீசுகளை பார்த்தபோது ஏதோ தெரியாமல் அனுப்பிவிட்டார்கள் என நினைத்தேன். ஆனால் இப்போது எனது சொத்துக்களை பறிமுதல் செய்வதாக கூறி இருப்பதால் எனக்கு பயம் ஏற்பட்டு விட்டது. எனக்கு 2 இடத்தில் சொத்து இருக்கிறது. அதை பறித்து விடக்கூடாது என்பதற்காகவே வருமான வரித்துறைக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன் என ரவி குப்தா தெரிவித்துள்ளார்.