கவுரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கக் கூடாது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கவுரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கக் கூடாது.


கவுரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கக் கூடாது. மருத்துவப் பணி நியமன ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கே உடனடியாகப் பணி நியமனம் வழங்கி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை தமிழக அரசு, நிதி அயோக்கின் வற்புறுத்தலால், கவுரவ மருத்துவர்களை நிரப்ப உள்ளது. 11.12.2019 ஆம் நாளிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கையில் இதை உறுதி செய்வதாக உள்ளது. கவுரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிப்பது, கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள உதவி மருத்துவர்களுக்கான (Assistant Surgeon -General) 1884 காலிப் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் பணி நியமன ஆணைய ( Medical Recruitment Board) தேர்வு மூலமாக நிரப்பிட, டிசம்பர் 2018 (9.12.2018 )-ல் எழுத்துத் தேர்வு நடத்தியது.
அதன் மூலம், 856 மருத்துவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1,028 பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை.
அவர்களின் இடங்கள் காலியாக உள்ளன.
அந்த காலிப்பணியிடங்களை, எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நியமிக்க வேண்டும். அதை விடுத்து, மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையிலோ, கவுரவ அடிப்படையிலோ நியமிக்கக் கூடாது.
அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளுக்கு, கவுரவப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள மருத்துவர்களுக்கு, ஊதியம் நிர்ணயித்து வழங்கிடவும், மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு வற்புறுத்துகிறது.
வெளிநாட்டினரையும், வெளி மாநிலத்தவரையும், பேராசிரியர்களாக கவுரவ அடிப்படையில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு முயல்கிறது
. இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.
எனவே, இம்முயற்சியையும் கைவிட வேண்டும். நிதி அயோக், மாவட்ட மருத்துவமனைகளை, பொது தனியார் பங்களிப்பின் அடிப்படையில் (PPP model), மருத்துவக் கல்லூரிகளைத் தனியார் தொடங்கிட வேண்டும் என மாநில அரசுகளை நிர்பந்தித்து வருகிறது.
அது தொடர்பாக வரும் ஜனவரி 21 அன்று டெல்லியில் நிதி அயோக் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது.
நிதி அயோக்கின் நிர்பந்தங்களுக்கு தமிழக அரசு அடிபணிந்து வருவது கவலை அளிக்கிறது. மாவட்ட மருத்துவமனைகள் தனியார் மயமானால், அது இளம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துவிடும்.
அது பொது சுகாதாரத்துறையை வலுவிழக்கச் செய்துவிடும்
. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, இத்தகைய தனியார் மயமாக்கும் முயற்சிகளையும், நிதி அயோக்கையும் மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்”.
இவ்வாறு ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Subscribe Here