சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்கள் 75 சதவிகித வருகைப் பதிவு கொண்டிருந்தால் மட்டுமே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடியும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், ஜனவரி 1, 2020-ஆம் தேதியில் குறைந்த பட்சம் 75 சதவிகித வருகையை உறுதி செய்யவேண்டும் . அதைவிடக் குறைந்த வருகைப் பதிவு கொண்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கவுள்ளது. இதில், குறைந்தபட்ச கட்டாய வருகைப் பதிவேடான 75 சதவிகிதம் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இதில், குறைவான வருகையைக் கொண்ட மாணவர்கள் மண்டல அலுவலகங்களை அணுக வேண்டும். மேலும், மாணவரின் குறைவான வருகைக்கு உண்மையிலேயே தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின், அதற்கான ஆவணங்களை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 7-ஆம் தேதிக்குப் பிறகு அளிக்கப்படும் ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.