புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் இயக்கத்தில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
. இவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை வழியில் உள்ள ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இது முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்று தெரிகிறது. பீகார் மாநிலம் சமஷ்டிபூர் ரயில் நிலையத்தில் நடைமேடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதி போட்டி போட்டு எடுத்துச் செல்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தாலும், கொரோனா தடுப்பின் முக்கிய அம்சமான சமூக இடைவெளி கடைப்பிடித்தல் என்பது காணாமல் போய் விட்டது. இந்த காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், பீகாரின் கத்திகார் ரயில்நிலையத்தில் ஒருவரிடம் இருந்து சிலர் உணவுப் பொட்டலங்களை பறித்துச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில், கடையை உடைக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர்,
அங்குள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.
இதற்கெல்லாம் ரயில்வேத்துறையின் அலட்சிய செயல்பாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்குவதில் பெரும் அலட்சியம் காட்டப்படுகிறது. அதனால்தான் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் உணவுக்காக மோதிக்கொள்வது, திருடுவது போன்ற அவலச் செயல்களில் ஈடுபடும் நிலையை உருவாக்கி உள்ளது. இது கொரோனா பரவலுக்கு மேலும் வழிவகுக்கும் என்பதை ரயில்வே நிர்வாகம் உணர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்லும் வரை அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.