மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்100 நாள் வேலை கேட்கும் 35 லட்சம் பட்டதாரிகள்: கொரோனா ஏற்படுத்திய தேசிய அவலம்
நாடு முழுவதும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை கேட்டு, கடந்த 2 மாதங்களில் 35 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதுமான ஊரடங்கினால் பல்வேறு மாநிலங்களில் வேலை பார்த்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை, உணவு, தங்குமிடம் ஆகியவற்றை இழந்து அவர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். வாழ வந்த மாநில அரசும் உதவாததால் வெறுத்து போன அவர்கள், கால்நடையாகவே தங்களது ஊர்களுக்கு திரும்பத் தொடங்கினர். இதனிடையே, அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல அவர்கள் தங்கியிருந்த நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய அரசு அளித்த தகவலின்படி, `கடந்த மே 1 முதல் ஜூன் 3 வரையிலான கால கட்டத்தில் 4,228 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இவற்றின் மூலம் ஒரு கோடி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊர் திரும்பிய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி இவர்கள், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையில் சேர்ந்து வருகின்றனர். இவர்களில் எம்ஏ, பிஎட் உட்பட பல்வேறு பட்டப்படிப்புகளை படித்தவர்களும் அடங்குவர்.
கடந்த ஏப்ரல் முதல் கடந்த 2 மாதங்களில், நாடு முழுவதும் 35 லட்சம் பட்டதாரிகள் இந்த வேலைக்காக விண்ணப்பித்து உள்ளனர். உத்தர பிரதேசத்தில் ஊர் திரும்பிய தொழிலாளர்கள் 30 லட்சம் பேருக்கு இந்த வேலையை வழங்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
இதேபோல், பல்வேறு மாநிலங்களும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
* இந்த வேலை செய்யபவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர், ஊரடங்கால் வேலைகளை இழந்த பட்டதாரிகள்.
* கிராமப்புற வேலை திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, நாடு முழுவதும் 14 கோடி மக்கள் அடையாள அட்டை வாங்கி வைத்துள்ளனர்.
* இந்த 14 கோடி பேருக்கும் 100 நாட்கள் வேலை வழங்குவதாக இருந்தால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2.8 லட்சம் கோடி செலவாகும்.
14 கோடி மக்கள் தகுதி
* ஊரடங்குக்கு முன்பாக, கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு கிராமத்தில் 20 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டது. இப்போது, 100 பேருக்கு தரப்படுகிறது.