தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை, கொளத்தூரில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளும் 200-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் பன்முக கொரோனா தடுப்பு போர்கால நடவடிக்கைகளால் சென்னையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதோடு தினசரி தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட் கள் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படுகிறது. இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவ குழுக்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார்.
தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். தியாக மனப்பான்மையோடு வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த கொரோனா காலத்தில் போராட்டங்கள் நடத்த வேண்டாம். உங்களுடைய கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.