தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த பிப்ரவரியில் தொழில்நுட்ப வாரியத்தின் மூலம் நடந்த, தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வில் 1.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஊரடங்கு அமலாகும் முன்பே, மார்ச் மாதத்தில் திருத்தி முடிக்கப்பட்டன. தேர்வு முடிந்து 4 மாதங்களை கடந்தும், அதன் முடிவுகள் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள், அரசு வேலைவாய்ப்பு பெறவும், அடுத்தகட்ட நகர்வுக்கும் வழியின்றி குழப்பத்தில் உள்ளனர். தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், சான்றிதழ் பெறுவதிலும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்வாணைய தேர்வுக்கு, தகுதி பெற முடியுமா என்ற அச்சமும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் தாமதமாக விடைத்தாள் திருத்தும் பணி துவங்கினாலும், 8 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எனவே, தமிழக அரசு தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுக்கான முடிவுகளை விரைந்து வெளியிட, தொழில்நுட்ப வாரியத்தை வலியுறுத்தி வந்த நிலையில் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது http://tndte.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.