குரூப் - 1 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முறைக்கு எதிரான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி.,க்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், சி.டி.எம். புரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் தாக்கல் செய்த மனு:துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, 139 பணியிடங்களுக்கு, குரூப் - 1 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., 2019 ஜன., 31ல் அறிவித்தது. எம்.இ., தேர்ச்சி பெற்ற நான் தேர்வில் பங்கேற்றேன்.தேர்வானவர்களின் தற்காலிக பட்டியல் 2020 ஜன., 19ல் வெளியானது. நன்றாக தேர்வு எழுதியும், தரவரிசை பட்டியலில், 138வது இடம் கிடைத்தது.
பிரதான எழுத்துத் தேர்வு விடைத்தாள்களை ஒருவர் மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கிய பின், அதை மற்றொருவர் மதிப்பீடு செய்து, மதிப்பெண் அளிக்கிறார்.இருவர் வழங்கிய மதிப்பெண்ணை கூட்டல் செய்து, அதை இரண்டால் வகுத்தல் செய்து, சராசரி மதிப்பெண் வழங்குகின்றனர். இது, தகவல் சட்டத்தின் கீழ் பெற்ற விபரம் மூலம் உறுதியானது. இது, அறிவியல் பூர்வமற்றது; முரண்பாடானது. முதலில் மதிப்பீடு செய்பவர் ஒருவித அளவுகோலை பின்பற்றி, மதிப்பெண் வழங்குகிறார்.
அதற்கு மாறுபாடாக, இரண்டாவது மதிப்பீடு செய்பவர், மதிப்பெண் அளிக்கிறார்.இதனால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீட்டு முறை சட்டவிரோதம் என, ரத்து செய்ய வேண்டும். தகுந்த விஞ்ஞானப்பூர்வ வழிமுறையை பின்பற்றி, விடைத்தாளை மதிப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய, உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக