கொரோனா பாதிப்பால் பள்ளியில் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைனில் படித்து வருகிறார்கள்.
4 மாதமாக வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9, 10,11,12-ம் வகுப்புகளுக்கு வருகிற 21-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றால் கற்பித்தல் பணி பாதிப்பு, பள்ளி திறப்பு தாமதம் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளி கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
தற்போது பள்ளி திறப்பு மற்றும் பாடஅளவு குறைப்பு தொடர்பான 2-ம் கட்ட அறிக்கையை நிபுணர்குழு, தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து பள்ளி கல்வி உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பொதுதேர்வு எழுத உள்ள 10, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் பள்ளிகளை திறந்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அதற்கு ஏற்ப பாட அளவை குறைக்கவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கல்வி ஆண்டு தாமதத்தால் பாடங்களை நடத்தி முடிக்க போதிய கால அவகாசம் இருக்காது. எனவே 10,11,12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதமும் இதர வகுப்புகளுக்கு சூழலுக்கு ஏற்ப 40 சதவீதம் வரையும் பாட அளவை குறைக்க வேண்டும்.
அதே நேரம் அடிப்படை கருத்துகளுடன் தொடர்புடை கூடுதல் பகுதிகள் மட்டும் அதிக அளவிலான பயிற்சி வழிமுறைகள் நீக்குதல் அடிப்படையில் பாடத்திட்ட குறைப்பு அமைய வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு சிரமங்களை தவிர்க்க திருப்புதல் தேர்வுகளை மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.