கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த நேரத்திலும், தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம் என்ற நிலை உள்ளது.இதையடுத்து, தடுப்பூசி தயாரிப்பு, வினியோகம் மற்றும் அதை மக்களுக்கு வழங்குவது வரையிலான பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு வருகிறது.ஆதார் எண் அடிப்படையில், தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றவும், ஆதார் இல்லாதவர்களுக்கு, அரசு வழங்கிய ஏதாவது ஒரு புகைப்பட அடையாள அட்டையின் அடிப்படையில், தடுப்பூசி வழங்கவும் திட்மிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்குவதை, ‘ஆன்லைன்’ வாயிலாக ஒருங்கிணைக்கவும், பயனாளர்களுக்கு, தடுப்பூசி வழங்கப்படும் தேதி, நேரம், இடம் போன்றவற்றை, எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி, அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து கட்டடங்கள் உள்ளிட்டவற்றிலும் தடுப்பூசி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான இடங்களை அடையாளம் காணும்படி, மாநில அரசுகளுக்கு,மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்
கொரோனாதடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, எந்தெந்த நாட்டு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறித்து, சர்வதேச பொருளதார அமைப்பு, கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. 15 நாடுகளைச்சேர்ந்த, 18 ஆயிரத்து, 526 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், சீனா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் மத்தியில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மனிதர்கள் மீதான பரிசோதனை அவசரகதியில் நடப்பதாலும், பக்க விளைவுகள் குறித்த பயத்தாலும், பலர் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில், 87 சதவீதம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக, கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக