ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

 


ஊடகச் செய்தி
மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 02/2021  நாள்: 02.02.2021

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு!
போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!

                                         தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை.

                                         போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்றாலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை வரவேற்கிறது. அதேநரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

                                         ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 முதல் 30 முடிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

                                          ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டது. காவல்துறை மூலம் பொய் வழக்குகளைப் புணைந்தது, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொலைதூரப் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டக் களத்திலும் சிறைச்சாலைகளிலும் வரலாறு காணாத அளவிற்கு அவமானப் படுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சிகள் இன்றளவும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நெஞ்சில் ஆறாத காயங்களாய் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகள் மறக்கவும், மன்னிக்கவும் முடியாத நிகழ்வுகளாகும்.

                                          இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளான பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாமலும், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமலும், தேர்வு நிலை/சிறப்பு நிலை, ஊதிய உயர்வுகள் கூட அனுமதிக்கப்படாமலும் கடந்த 2 ஆண்டு காலமாக கொடுந்துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் மட்டும் 1973 பேர் பாதிக்கப்பட்டனர்.

                                           இதனால் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய ஆசிரியர்களும், அரசுஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளியது.

                                           இதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனியாகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்போடு இணைந்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. 20.02.2021 அன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தவுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று (02.02.2021) முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளது.

                                            31.01.2021 அன்று திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர் ச.மோசஸ், செல்வம், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 08.02.2021 முதல் 10.02.2021 முடிய 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதெனவும், அந்நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

                                            இதன் பின்னணியிலும், தேர்தல்கால களச் சூழலை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பில் ஒரு வார்த்தை கூட இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும், நடைபெற்ற போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத இரண்டு சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையின் பேரில் ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளதாக தமிழக முதலமைச்சரின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது போராட்டக் களத்தில் நின்ற சங்கங்களை மீண்டும் காயப்படுத்துவதாக உள்ளது.

                                            எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், வேலை நிறுத்தக் காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முன்பு அவர்கள் பணியாற்றிய இடத்தில் பணியமர்த்திட வேண்டும். கடந்த காலங்களை போல் வேலைநிறுத்தக் காலத்தை முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,

ச. மயில்
பொதுச்செயலாளர்                                                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here