தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆகச் சிறந்த பேச்சாளரான தா. பாண்டியன்
தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத் தக்க பங்கு வகித்தவர், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரான மூத்த தலைவர் தா.பாண்டியன்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழ வெள்ளைமலைப்பட்டியில் 1932, மே 18 ஆம் தேதி தா.பாண்டியன் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள். அவர்களது எட்டுக் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தனர்.இதையும் படிக்கலாமே.. பத்து வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பால், காவல் நிலையம் மீது கல்லெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். 1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறைக் காலத்தில் கைது செய்யப்பட்டவர். இதனால் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் தா. செல்லப்பாவின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அண்ணனிடமே மார்க்ஸீயம் கற்றதோடு, பள்ளி, கல்லூரிகளில் பயின்று முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1953-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளரானார். அங்கேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது மனைவி திருமதி ஜாய்ஸ் பாண்டியனும் ஆசிரியர்தான்.1961ல், ஜீவாவின் முன்முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் முதலாவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகி, சென்னை வந்தார். சட்டக் கல்லூரியில் மாணவரானார்.
பிறகு அவரது மனைவியும் குழந்தைகளோடு சென்னை வந்து, பள்ளி ஆசிரியை பணி தேடி அமர்ந்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.1962ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலைத்து நின்ற தா.பாண்டியன், தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு படிப்படியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளார். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1989 – 90 மற்றும் 1991 – 1996 என ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவர். ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் செயல்பட்டிருக்கிறார்.1991ல் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலையுண்டபோது, மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி நீண்ட காலம் மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்தார். அந்தக் குண்டுச் சிதறல்களை வாழ்நாள் முழுவதும் தாங்கியே வலம் வந்தார்.திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளராக 2005ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, 2015 வரை அப்பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து தேசியக் குழு உறுப்பினராக இறுதி மூச்சுவரை பணியாற்றினார்.
சிவகங்கை அரண்மனையில் தா.பா. தலைமையில் நடந்த பாரதி விழாவில் ஜீவா பேசுகிறார்.
தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்புக் கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததை சுவைகுன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாக கைவந்தது.தமிழிலும் ஆங்கிலத்திலும் இயல்பாக, ஆற்றொழுக்காகப் பேசக்கூடியவர் பாண்டியன்.பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ஜனசக்தியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர்.ஜனசக்தியில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தீப்பறக்கும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் அதனால் தாக்குதலுக்கு உள்ளபவர்கள் கூட தேடிப்படிக்கும் அளவு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியவை. ஜனசக்தியின் ஆசிரியராக இறுதி மூச்சுவரை அவர் பணியாற்றியுள்ளார்.கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியபோது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லத்’துக்கு சென்னை, தி.நகரில் எட்டு அடுக்குகள் கொண்ட கட்டடத்தை எழுப்பினார்.
ஜீவாவுடன் தா. பாண்டியன்
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர். தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது.
தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்க்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார்.அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூர்மையான எதிர்ப்பாளரான அவர், போருக்கு எதிரான, உலக மக்களிடையே ஒப்புரவுக்கான இயக்கங்களை நடத்தி தலைமை தாங்கியவர்.
கடந்த சில ஆண்டுகளாக தா. பாண்டியனுக்கு உடல் நலக் குறைவு நேரிட்டது. சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதில் வாரத்திற்கு இரு நாள்கள் டயாலிஸிஸ் செய்ய வேண்டி நேரிட்டது. உடலும் நலிவுறத் தொடங்கியது.எனினும், சிகிச்சை எடுத்துக் கொண்டே, தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளிலும் இடைவிடாமல் ஈடுபட்டுவந்தார்.
கடந்த வாரத்தில் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்று உணர்ச்சிமிகு உரையொன்றையும் நிகழ்த்தினார்.பின்னர், மதுரை, உசிலம்பட்டி அருகேயுள்ள அவருடைய சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுச் சென்னை திரும்பினார். செவ்வாய்க்கிழமை இரவு அவருடைய உடல்நிலை சீர்குலைந்தது.இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா. பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஜீவா வழியிலான இடதுசாரி இயக்கங்களில் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான தா. பாண்டியன் மறைவு, இடதுசாரி இயக்கத்துக்கும் தமிழுக்கும் பேரிழப்பு.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக