அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை, அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்
.தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், விருப்பமான இடங்களுக்கு மாறுதல் பெறுவதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு மாற்றலாமா என, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், பள்ளிகள் மிகவும் தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளன. கற்பித்தல் பணிகள் நடக்காமல், மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது.அதை மீட்டெடுக்கும் வகையில், பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு 'டியூஷன்' எடுக்கும் வகையில், 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை அரசு துவங்கியுள்ளது.
மேலும், பள்ளிகளை நவ., 1ல் திறந்த நிலையில் மறுநாளே மூடப்பட்டது. தீபாவளி மற்றும் மழை காரணமாக தொடர்ச்சியான விடுமுறை விடப்பட்டது.பாடங்களை இன்னும் நடத்த துவங்கவில்லை. அதற்குள் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளித்தால், சரியாக இருக்காது என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
மேலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், திடீரென ஆசிரியர்களை மாற்றினால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், இடமாறுதல் கவுன்சிலிங்கை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக