பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவர்களால் அங்கிலம் சரளமாக பேச முடியாதா?? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளியில் தமிழ் மீடியம் படித்தவர்களால் அங்கிலம் சரளமாக பேச முடியாதா??

பள்ளியில் தமிழ் மீடியத்தில்படித்தவர்களால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாதா?

தமிழா, ஆங்கிலமா, இந்தி மொழியா..? நாலுபேர் உட்கார்ந்திருக்கிற இடத்தில் இந்தக் கேள்வியைக் கொளுத்திப் போட்டால், நாலு மணி நேரம் பேசினாலும் அதற்கொரு தீர்வு கிடைக்காதபடிக்கு, ஏகத்துக்கும் பேசித் தீர்த்துவிடுவார்கள் நம்மவர்கள். நம் நாட்டைப் பொறுத்தவரையும், பல மாநில மக்களோடு பழகி ஆகணும்ங்கிற அத்தியாவசிய சூழ்நிலை இருக்கு. அது சந்தோஷமான விஷயமும்கூட. காலேஜ் ஆகட்டும், பிற்காலத்துல வேலை செய்யப்போற ஆபீஸாகட்டும், எல்லா மாநிலங்களிலிருந்தும் மக்கள் வர்றாங்க. ஐ.டி கம்பெனிகளோட பெரும்பாலான 'க்ளையன்ட்ஸ்’ வெளிநாட்டவர்கள்தான். இப்படி பலரையும் ஒண்ணா இணைக்கிற விஷயம்தான் மொழிங்கிற சமாசாரம். நம் எண்ணங்களையும், நாம சொல்ல நினைக்கிற அனைத்து விஷயங்களையும் மத்தவங்ககிட்ட கொண்டுபோய் சேர்க்கற ஒரு கருவிதான் மொழி. குறிப்பா, நம்முடைய தாய்மொழில பேசறதைக் காட்டிலும், கேக்குறவங்களோட மொழியில பேசும்போது தனி மரியாதைக் கிடைக்கும். 'டிட் யூ ஹேவ் யுவர் லஞ்ச்?’ என்று கேட்டால், இந்திக்காரன் முறைப்பான். 'கானா காலியே?’ என்று கேட்டால், குழைவான். அதேமாதிரிதான் நம்மவர்களும். சினிமா விழாக்களாகட்டும், இல்லை அரசியல் விழாக்களாகட்டும், யாராவது ஒருவர் தட்டுத்தடுமாறி, 'வணக்கம். எல்லாரும் நல்லாருக்கீங்களா'ன்னு மழலைத் தமிழில் பேசினால், விசில் அடித்து, கைதட்டுகிறோம். என்னைப் பொறுத்தவரை, இந்த மூன்று மொழிகள் மட்டுமல்ல, இன்னும் பல மொழிகளை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டாலும், எந்த ஒரு மொழியையும் உயர்வாக அல்லது தாழ்வாக நினைக்கத் தேவை யில்லை.

தமிழ், நம் தாய்மொழி. இந்தி, நமது தேசியமொழி. ஆங்கிலம், உலகமொழி. எந்த மொழியை நாம் எடுத்துக் கொண்டாலும் அதுல இருக்கிற நல்ல விஷயங்களை, குறிப்பா, அது நம்மோட நடைமுறை வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கைக்கு முக்கியமா இருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி இருக்கறப்ப, வீண் விதண்டாவாதங்களுக்காக அடுத்த மொழியைக் கத்துக்கறதுக்கு யோசிக்கறதும், அடுத்த மொழி நமக்குத் தெரிஞ்சிருந்தாக்கூட அதைப் பேச தயங்கறதும் தவறுதான். அவங்கவங்களுக்கு அவங்களோட தாய் மொழி உசத்திதான். நம்ம தமிழ் மொழியில இல்லாத இலக்கியங்களா, இதிகாசங்களா, உரைநூல்களா? திருக்குறள் ஒண்ணு போதாதா நமக்கு? இதே நினைப்புதான் ஒவ்வொரு மொழி பேசுகிறவனுக்கும் இருக்கும். இதைப் புரிந்துகொண்டு நம் எண்ணம் நமக்கு சரி என்று இருந்துவிட்டால், யாரும் யாருடனும் சண்டை இடத் தேவையில்லை.

நாம் எவ்வளவோ முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில்கூட, இந்தி தெரியாமல் இன்னும் ஒரு தலைமுறை எந்த பிரச்னையும் இல்லாமல் ஓட்டிவிடலாம். ஆனால், ஆங்கில மொழியைத் தெரிந்துகொள்ளாமல் இன்னும் பத்து ஆண்டுகளைக்கூட இன்றைய இளைஞர்களால் ஓட்ட முடியாது. வாழ்க்கை நடைமுறை களில் ஆங்கிலம் தெரிந்தாக வேண்டிய கட்டாயம் எல்லா மக்களுக்கும் கண்டிப்பா இருக்கு. அந்த மொழியை நல்லா பேசியும், எழுதியும் நாம் கவிஞனாகவேண்டிய அவசியமில்லை. ஆனா, அடுத்தவங்களோடு பேசறதுக்கும், பழகறதுக்கும், எழுதறதுக்கும் ஆங்கிலம் என்பது அத்தியாவசியமாகிவிட்டது.

ஒருமுறை ஒரு பயிற்சி வகுப்பு நடத்திக்கிட்டிருந்தேன். கிட்டத்தட்ட 400 மாணவர்கள். 'உங்கள்ல எத்தனை பேருக்கு இங்கிலீஷ்ல பேசுறதுல பிரச்னை?'' என்று கேட்டேன். ஏறக்குறைய எல்லோருமே கை தூக்கினார்கள். உடனே நான் ஒரு பையனைக் கூப்பிட்டு, ''தம்பி, உங்களால இங்கிலீஷ் பேச முடியும்னு நான் சொல்றேன். என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன். ''என்னால இங்கிலீஷ்ல பேசவே முடியாது சார்'' என்றான் அவன். சரி, பார்த்துடலாம்னுட்டு இங்கிலீஷில் கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். ''வாட் இஸ் திஸ்?'' என்று கேட்டேன் ஒரு டேபிளைக் காட்டி. 'டேபிள்' என்றான். ''வாட் இஸ் திஸ்?'' ''போர்டு' ''வாட் இஸ் திஸ்?'' 'ஃபேன்...' ''வாட் இஸ் திஸ்?'' 'விண்டோ...' அவனை அப்படியே நிறுத்தி, கூட்டத்துல சொன்னேன். ''நான் ஆங்கிலத்துல கேக்குற கேள்விக்கெல்லாம் கரெக்ட்டா பதில் சொல்றாரு, இவரு இங்கிலீஷ்ல பேசுறாரா, இல்லையா?''ன்னு கேட்டேன். நான் இப்படி சொன்னது தான் தாமதம். எல்லாரும் பலமா கைதட்டினாங்க. பதில் சொன்ன பையனுக்கு பெருமை தாங்கல. இத்தனை பேரா நம்மளைப் பார்த்து கைதட்றாங்கன்னு அசந்து போயிட்டான். நமக்கு இருக்கற பெரிய பிரச்னையே, நாம இங்கிலீஷ்ல பேசணும்னு நினைச்சாகூட அடுத்தவங்க நம்மை கிண்டல் பண்ணிடுவாங்களோ, இல்ல தப்பா பேசிடுவோமோ, இல்ல நம்ம பேசற இங்கிலீஷ§க்கு, அவங்க சொல்ற பதில் நமக்குப் புரியாம போயிடுமோங்கற பயங்கள். வீட்லயும் சரி, வெளியிலயும் சரி, நமக்கு இங்கிலீஷ்ல பேசறதுக்கு ஆள் கிடைக்கிறதில்ல. அதனால நாம நம்ம தாய்மொழியிலேயே பேசுறோம். சில கல்லூரிகளில இங்கிலீஷையே தமிழ்ல சொல்லித் தர்ற பரிதாபம் நடக்குது. பசங்ககிட்ட இங்கிலீஷ் பேசினாலும், 'மச்சி, சும்மா பீட்டர் விடாதே’ன்னு சொல்லி நக்கல் பண்ணுவாங்க. இதனால் ஆங்கிலத்துல பேசுற முயற்சியே இல்லாமப் போயிடுது. ஆனால், தமிழகத்தில் எந்த பெரிய கோயிலுக்கும் முன்னால் உக்கார்ந்திருக்கிற ரிக்ஷாக்காரரைப் பாருங்கள். வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்திருக்கும் பயணிகளுடன் கொஞ்சம்கூட பயப்படாமல் அவர் இங்கிலீஷில் பேசுவார். அவரை யாரும் கேலி பண்ண முடியாது. அப்படியே பண்ணினாலும் அதை அவர் கண்டுக்கமாட்டார். காரணம், அது அவர் வாழ்க்கை பிரச்னை. ஒருதரம் ஒரு மாநாட்டுக்காக டெல்லியில் தங்கியிருந்தோம். எனக்கு அங்க சாப்பாடு ஒத்துக்கலை. எந்த சாப்பாடு சாப்பிட்டாலும் தயிர்ல முடிக்கிறதுதான் என் வழக்கம். அந்த ஹோட்டல்ல வேலை செய்கிறவர்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும். எனக்கு இந்தி சுத்தம். எனக்கு தயிர் வேணும்னு அவருக்குச் சொல்லி புரியவைக்கறதுக்குள்ள விடிஞ்சிடுச்சி. இந்தி தெரிஞ்சிருந்தா இத்தனை பிரச்னை இல்லையேன்னு அன்னைக்கித் தெரிஞ்சுகிட்டேன்.

தமிழ் மீடியத்துல படிச்சவங்க, ஆங்கிலத்துல பெரிய ஆளா வரமுடியாதுன்னு நினைக்கிறாங்க. இது மகா தவறு. நான் சொல்ற விஷயத்தை நீங்க கடைப்பிடிச்சா, நீங்களும் ஆங்கிலத்துல நிச்சயமாப் பேசலாம்.

1. தினமும், டிக்ஷனரியை வச்சுகிட்டு ஐந்து வார்த்தைகளை மனப்பாடம் பண்ணுங்க. அதோட 'ரிலேடட்’ வார்த்தை என்னங்கறதையும் சேர்த்து மனப்பாடம் பண்ணுணீங்கன்னா, ஒருநாளைக்கு 10 வார்த்தை சுலபமா தெரிஞ்சிக்கலாம். ஒரு வருஷத்துல 3,600 வார்த்தைகள் மனப்பாடம் ஆயிடும்.

2. தினமும் ஆங்கில நாளிதழ் ஏதாவது ஒண்ணு படிக்கறதை வழக்கமா வச்சிக்குங்க. மொதல்ல சினிமா பக்கமும் ஸ்போர்ட்ஸ் பேஜும் படிங்க, தப்பில்லை!

3. ரொம்ப சிம்பிளான வார்த்தையா முதல்ல தெரிஞ்சுகிட்டு பேச ஆரம்பியுங்க. உதாரணத்துக்கு, 'ஸீ யூ’, 'ஓகே ஐ வில் டூ இட்’ங்கிற மாதிரி குறைந்தபட்ச வார்த்தைகள்.

4. முடிந்தவரை முதல்ல நண்பர்கள்கிட்ட பேச ஆரம்பியுங்க. மத்தவங்க கிண்டல் செஞ்சாலும் பரவாயில்லை, முயற்சி பண்ணுங்க

. 5. நல்ல ஆங்கிலத் திரைப்படங்கள் சப்டைட்டிலோட பாருங்க. அவங்க உச்சரிப்பு புரியும். படிப்படியா நீங்களே சப்டைட்டில் இல்லாம ஃபாலோ பண்ணக் கத்துக்குவீங்க.

6. தாய்மொழியில யோசித்து, அதை மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில பேசாதீங்க.

7. தனியா வீட்ல கண்ணாடி முன்னால நின்னு பேசி பழகுங்க. உங்க முகபாவத்தையும், நீங்க பேசற வார்த்தை உச்சரிப்பையும் அது சரி பண்ணிடும்.

8. உரக்கப் பேசுங்க. மொழிகள்ல ஓர் ஆபத்து என்னன்னா, ஒரு வார்த்தைக்கே இரண்டு அர்த்தங்கள் வரும். அதனால, உங்க உச்சரிப்பும் சரியா இருந்தாதான் கேட்கறவங்களுக்கு அது விளங்கும். எந்த மொழியா இருந்தாதான் என்ன, தைரியமாப் பேசிப் பழகினா நிச்சயம் வந்துடும். குதிரையைக் குளத்துகிட்ட கூட்டிகிட்டுதான் போக முடியும்; தண்ணி குடிக்க முயற்சிக்கறது அதோட வேலைதான். முடியாதது எதுவுமே நம்ம அகராதியில இருக்கக்கூடாது. நம் கனவு பலிக்கணும்னா முதலில் நாம் எழுந்திருக்கணும். தாய்மொழியைத் தப்பா பேசினாதான் தப்பு. அடுத்த மொழியைத் தப்பா பேசினா தப்பே இல்லை. ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்க. தமிழை மூச்சில் வையுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here