www.sivakasiteacherkaruppasamy.com
’நீங்கள் புள்ளிவிவரப் புலியாக இருக்கலாம் அதற்காக அதை சட்டமன்றத்தில் காட்டாதீர்கள்’ என்று சட்டமன்றத்தில் பேசியதற்காக விஜயகாந்திடம் திட்டு வாங்கிய நபர், அதே புள்ளிவிவரப் பேச்சால் தான் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல. ஆவடி சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் தான். அவர் எப்படி அமைச்சரானார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு சின்ன பிளாஷ்பேக்.
2011ம் ஆண்டு எம்.எல்.ஏ-வானதும் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, பாண்டியராஜன் பேசினார். பொதுவாக, உறுப்பினர் பேசும்போது முதல்வர் குறுக்கிடவே மாட்டார். பாண்டியராஜன் பேசும்போது, இரண்டு முறை முதல்வர் குறுக்கிட்டு விளக்கம் கொடுத்தார். இது, மறுநாள் செய்திகளில் பெரிய அளவில் வெளிவந்தது. இதில் இருந்துதான் பிரச்னையும் ஆரம்பமானது. அப்போது தான் விஜயகாந்த், ‘நீங்கள் புள்ளிவிவரப் புலியாக இருக்கலாம். அதை சட்டமன்றத்தில் காட்டாதீர்கள்’ என்று கோபப்பட்டிருக்கிறார்.
யார் இந்த மாஃபா ?
பாண்டியராஜனுக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமம். இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பிறந்தது 1959 - ஏப்ரல் 26. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மாஃபா, சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்த்தபடி படிக்கவும் செய்தார். சிவகாசியில் உள்ள எஸ்.ஹெச்.என்.வி பள்ளியில் பள்ளி படிப்பையும், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.யு.சி படிப்பையும் நிறைவு செய்தார். அதன்பின் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூரில் உள்ள புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.
தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல அப்போது தான் இந்தியாவிற்கே புதிதாக அறிமுகமாகி இருந்த ஐ.டி துறையின் மனிதமேம்பாட்டுவளப் பிரிவில் கால்வைத்தார் பாண்டியராஜன். 1992ம் ஆண்டு கொஞ்சம் முதலீட்டோடு MaFoi என்கிற ஐ.டி நிறுவனத்தை துவங்கினார். அன்றில் இருந்து தான் மாஃபா பாண்டியராஜன் ஆகிப் போனார். 60,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் 2010ம் ஆண்டில் 1000கோடி என்கிற இலக்கை எட்டியது. இதுவரை 3.5 லட்சம் ஊழியர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார் மாஃபா. அதோடு விகடனிலும் வேலைவாய்ப்பிற்கான தொடர் ஒன்றை எழுதி இருக்கிறார். இவரது மனைவி ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தனது அரசியல் ஆர்வம் காரணமாக பி.ஜே.பி.,யில் இணைந்தார். அந்த சமயத்தில் தான் விஜயகாந்த் அசுர வளர்ச்சி அடைந்தார். பி.ஜே.பி.,யில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வில் ஐக்கியமானார். கேப்டனின் ஆலோசகராக இருந்தார் மாஃபா. விஜயகாந்த்தும் அவருக்கு விருதுநகர் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அதே சமயத்தில் தேர்தல் பிரிவுச் செயலாளர் என்ற பொறுப்பும் கொடுத்தார்.
தே.மு.தி.க எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான போது, மனக்கசப்பின் காரணமாக மாஃபா பாண்டியராஜனும் அ.தி.மு.க முகாமிற்கு மாறினார். 2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க.,வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா.
மாஃபா to மாண்புமிகு... !!
தே.மு.தி.க.,வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.,வில் இணைந்த யாருக்கும் சீட் கிடைக்காத நிலையில் இவருக்கு மட்டும் ஆவடி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆவடி தொகுதியில் மூன்று நகராட்சிகளில் இரண்டு தி.மு.க.,வின் கையில் இருக்கும் நேரத்தில் தேர்தலைச் சந்தித்தார் மாஃபா. தேர்தலில் தனது மாணவர்கள் பலருடன் கலந்தாலோசித்து MyAvadi App என்கிற பெயரில் செயலி ஒன்றை உருவாக்கி ஆவடி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அப்போதே ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்றார்.
இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சையும் கவனித்து வந்தார் ஜெயலலிதா. அதில் மாஃபா பாண்டியராஜன் பேச்சை அதிகம் கவனித்தார். தி.மு.க உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசியபோது அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் விழிபிதுங்கினர். அப்போது தோரணையாக எழுந்து ’ஆபிஸர் இங்கிலீஷ்’ பேசி பழனிவேல் தியாகராஜன் கேள்விகளுக்கு புள்ளிவிவரங்களோடு பதில் சொன்னார் மாஃபா. இதை ரசித்தார் ஜெயலலிதா. பல இடங்களில் அமைச்சர் பேச வேண்டிய இடத்தில் பாண்டியராஜன் பேசி லைக்ஸ் அள்ளினார்.
இதேபோல கடந்தவாரம் ஜி.எஸ்.டி மசோதாவை எதற்காக தமிழக அரசு எதிர்க்கிறது என்பது பற்றி 10 நிமிடம் விரிவாக உரையாற்றினார். அதில் இந்த மசோதா கொண்டு வருவதன் மூலம் காங்கிரஸ்- பி.ஜே.பி கட்சிகள் எப்படி ஆதாயம் அடையும் என்பதையும், இதனால் மாநில அரசுகளுக்கு எவ்வுளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் விரிவாக விளக்கினார் மாஃபா. இதுவும் மாஃபா மீதான இமேஜை ஜெயலலிதாவிடம் உயர்த்தியது. அதோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமினின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் அந்த துறைக்கு புதிதாக செய்யப்பட்டு இருக்கிறார் புள்ளிவிவரப்புலி மாஃபா பாண்டியராஜன். முதலிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமைச்சர் பதவி இப்போது அவருக்கு கிடைத்திருக்கிறது
போன சட்டமன்றத்தில் எந்த புள்ளிவிவரத்திற்காக குட்டு வாங்கினாரோ, இந்த சட்டமன்றத்தில் அதே புள்ளிவிவரப் பேச்சிற்காக அமைச்சராகி இருக்கிறார் மாஃபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக